பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

வெறுப்பையும் கிளப்ப வேண்டாமென்று இக் கூட்டத்தார்க்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

          *                  *                  *

வளைந்து வளைந்தோடும் அந்த அருவி வெண் மணலைத் தழுவிக்கொண்டு. தழதழத்த குரலில் பாடுவது கேளீர்! எந்தப் பாட்டு இதற்கு ஈடாகும்!

செடியும் கொடியும், தளிரும் இலையும், மலரும் கனியும், ஆடும் காரணம் அறியீரோ! அதோ, வீசும் காற்றுடன் கலந்து வரும் இசை கேட்டே, அவைகள் ஆடுகின்றன; நடன சுந்தரிகள் போல!

பச்சிளங்கன்று, தாயைக் கூப்பிடும் குரல் கேட்டீரோ? அதிலுள்ள இசை இன்பமே தனியானது!

போர் வீரன், தனது உடலில் கவச மணிந்து, வாளை உரையினின்றும் எடுக்கிறானே, அச்சமயம் கிளம்பும் ஒலி, வீர உள்ளம் படைத்தோர்க்கு இசை!

இம்மட்டுந்தானோ! குழலா இனிது? யாழா இனிது? மக்களின் மழலையே இனிது, ஈடு எதிர் இல்லாத இசை யாகும் இது!

இங்ஙனம் மக்கள் இசை இன்பத்தை, ஓடும் அருவியில், வீசும் காற்றில் விளையாடும் கன்றின் குரலில், கொஞ்சும் குழந்தையிடம், வீரரின் செயலில், காதலியிடம் காண்பர்! களிப்பர்!!

இசை இன்பம், இயற்கையிலும், தமது அன்புக்குரிய இடங்களிலும் இருக்கக் காண்பர். உள்ளத்தில் களிப்புக் கொள்வர்! பிறகு, ஓடும் அருவி பாடினது என்ன? எனின் கூற இயலாது. இனிமை இருந்தது என்று மட்டுமே சொல்ல இயலும். களிப்புடன் கருத்துக்கு விருந்தும் இருக்கவேண்டுமாயின், இசை இன்பத்தோடு பொருள் இன்பம் இழைந்து குழைந்து இருத்தல் வேண்டும்.