பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பிரிட்டனிலே, (Tudor) டியுடர் மன்னர் காலத்திலே, மறுமலர்ச்சி ஏற்பட்டது. மதத்துறையிலே சீர்த்திருத்தம், மக்கள் மன்றத்துறையிலே மாறுதல்கள், கலையிலே ஓர் புதுமை தோன்றிற்று. சிறந்த இலக்கியங்கள் வெளி வந்தன. தன்னாட்டுணர்ச்சி தன்மொழிப்பற்று. தன்மானம் ஆகியவைகள் தாண்டவமாடின. பின்னரே பிரிட்டன், பலமுள்ளதாயிற்று. பிரிட்டனிலே, கவிகள், எழுத்தோவியங்களை ஏற்படுத்திக்கொண்ட நேரத்திலே தான், பிரிட்டீஷ் கப்பல்கள், திரைக் கடல்களைக் கடந்து சென்றன. மக்கள் தீரச் செயல்கள் புரிந்தனர். பழங்காலம் என்பது எல்லாத் துறைகளிலும் மடிந்தது. எழுதுவது புது முறையில்; பேசுவது புதுவிதமாக; இலக்கியம் புதுவிதமானது, என்ற நிலைமை ஏற்பட்டது.

ஐரோப்பாக் கண்டத்திலே, அறிவுலகமும் வீரர் உலகும் அமளியில் ஈடுபடும் விதமான புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேர், ரூசோ, மார்ட்டின் லூதர் போன்றவர்கள், இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தின் உழவர்கள்! அவர்களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும், எதிர்ப்பு இருந்தது! இறந்தது! இங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கின்றோம், இதற்கு எதிர்ப்பும் காண்கின்றோம். அந்த எதிர்ப்பு இறுதியில் மடியத்தான் போகிறது. கடல் அலையை, கைத் தடிக்கொண்டு அடிக்க முயலவோனின் கை சலிக்குமே யொழிய, அலை சலிக்காது!

ஆனால், மற்றைய நாடுகளிலே நடந்ததற்கும், இங்கு நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்கெல்லாம் மறுமலர்ச்சியை எதிர்த்தவர்கள், வெறும் பழமை விரும்பிகள். இங்கு எதிர்ப்பவர்கள், பழமை விரும்பிகள் மட்டுமல்ல; இன்று இருக்கும் முறையினால், ஆதிக்கம் செலுத்தி வாழும் கூட்டத்தினர். மறுமலர்ச்சி, பழமையைப் பாழாக்குமோ என்பது அல்ல அவர்களின் பயம். நமது ஆதிக்கம் போய்விடுமே என்பதே அவர்களின் திகில்.