பக்கம்:எனது நண்பர்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80  எனது நண்பர்கள்
 


அதற்கு திரு. பாண்டியர் கூறியதாவது, “இந்தப் போர்டில் ஒரு ஆளுக்கு என்மீது நம்பிக்கை இல்லாதிருந்தாலும் நான் தலைமைப்பதவி வகிப்பது சரியல்ல’ என்று கூறினார். எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தியும்கூட திரு. பாண்டியர் தலைமைப்பொறுப்பேற்க மறுத்து விலகிவிட்டார். அக்காலத்து பதவிகள் இம்மாதிரித் தலைவர்களைப் பெற்றிருந்தன.

சிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன்

திரு. செளந்திர பாண்டியனின் தலைசிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்றே எல்லோரும் கூறுவதுண்டு. சிகரெட்டுப் புகைப்பதிலிருந்து சீட்டாடுவதுவரை, அரசாங்கத்தில் நிர்வாகம் செய்வதிலிருந்து பொதுமக்களுக்கு உதவி செய்வதுவரை இருவரும் இரட்டையர்களாகவே திகழ்ந்தனர். யார், எதை எவரிடம் வினவினாலும், பாண்டியரிடமிருந்து வரும் விடையெல்லாம் ‘'ராஜனைக் கேட்க வேண்டும்; ராஜனிடமிருந்து விடையெல்லாம் ‘'பாண்டியனைக் கேட்க வேண்டும்!” என்றுமே இருக்கும். ஆம். அவர்கள் உண்மையாகவே மதுரையின் இரட்டைத் தலைவர்களாகவே விளங்கினர்.அதனாலேயே செளந்திர பாண்டியனுடைய மூத்த பேரனுக்குப் பெயரிட அழைத்த போது, ‘பாண்டியராஜன்’ என நான் பெயர் வைத்தேன். அவர்கள் துவக்கிய ஆலை இருக்கும் இடத்திற்கும் ‘பாண்டியராஜபுரம்’ எனப் பெயரிடும்படியும் தெரிவித்தேன் -

‘கோபமுள்ள இடத்தில் குணமிருக்கும்’ என்பது தமிழகப் பழமொழி. இதற்கு இலக்கணமாக அமைந்தவர் பாண்டியர். அவரை முன்கோபி என்று பலரும், குணக்குன்று என்று பலரும் கூறுவர். இதனாலேயே எல்லாரும் அவரிடம் காட்டும் மரியாதையில் அச்சமும் கலந்திருக்கும்.