பக்கம்:எனது நண்பர்கள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.கி. ஆ. பெ. விசுவநாதம்  91
 


உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நம்பிக்கை, நாணயம் ஆகியவைகளோடு எளிய வாழ்க்கை வாழ்ந்த பெருஞ்செல்வர் அவர். இதனால் இவருக்குக் காங்கிரஸ் கட்சியில் ஒரு தனிச் செல்வாக்கு ஏற்பட்டு, அனைவரும் அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர்.

1947இல் நமது மாநிலத்தின் முதலமைச்சர் பதவியைத் திரு. ரெட்டியார் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பதவியை ஏற்கு முன்னே, ரெட்டியார் அவர்கள் பதவி ஏற்க மாட்டார் என்ற வதந்தியை உண்டு பண்ணி விட்டார்கள். பதவியை ஏற்ற பிறகு “ஆங்கிலம் தெரியாதே! என்ன செய்வார்?” என்ற கேள்வியைக் கிளப்பி விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் போராட்டத்தின் விளைவினால் முதலமைச்சர் பதவி தமிழ் நாட்டுக்கு அதிலும் ரெட்டியாருக்குக் கிடைத்தது. இதில் திரு. காமராஜர் அவர்களின் முயற்சி பெரிதும் போற்றற்குரியது.

ஆங்கிலம் அறியாதவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்று கூறுபவர்கள் வெட்கப்படும்படி ஆட்சி நடத்தினார்கள். இது, அவர்கள் நேர்மை என்ற ஒரே ஆயுதத்தைக் கையாண்டு வந்ததின் விளைவு. நேர்மை என்ற ஒன்று மட்டும் கலங்கா மனத்துடன் விடாப்பிடியாகக் கையாளப் படுமானால், மற்றெல்லாத் தகுதிகளும், திறமைகளும் அதன் முன் மங்கிப் போய் விடும். கட்சிப் பற்றாளர்களின் வம்புக்கும், இழுப்புக்குங்கூட இசைந்து கொடுக்கும் தன்மை நேர்மைக்கு வராது. இந்த ஆற்றல் அவர்களுக்கிருந்தது.

இப்படிப்பட்ட முதலமைச்சர் திரு. ரெட்டியார் அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சியினரே கொண்டு வந்தனர். அதைக் கொண்டு வந்தவர்களில் தங்களுக்குக் “காண்ட்ராக்ட்” கிடைக்கவில்லை என்பவரும், தங்கள் உறவினருக்கு “டிபுடி சூப்பிரண்ட்” பதவி கிடைக்கவில்லை என்பவரும் இருந்தனர். இதைக் கண்டதும் திரு ரெட்டியார் அவர்கள்