பக்கம்:எனது நண்பர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  97

விபூஷண், அமைச்சர் முதலியன. பொது மக்கள் அவருக்கு வழங்கிய பட்டம் உண்மையைப் பேசி,நேர்மையாய் நடந்து ஒழுக்கத்தைக் காத்த பெருமகன் என்பது. இத்தனையும் அமைந்த ஒருவர் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாரும், இவரும் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள். நெருங்கிப் பழகிய பலருக்குக்கூட இவர் ஏ. எல் முதலியாரா? ஏ.ஆர் முதலியாரா? என அடையாளம் காண முடிவதில்லை. எனக்குக்கட்ட இத்தகைய குழப்பம் பல தடவை வந்ததுண்டு.

ஏ.ஆர். முதலியார் என ஏ. எல் முதலியாரையும், எ. எல். முதலியார் என ஏ. ஆர். முதலியாரையும் நினைத்து ஒருவரிடம் கூறவேண்டிய செய்தியை மற்றவரிடம் கூறி ஏமாந்துபோன பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்களும்கூட இதை வெளியே காட்டிக்கொள்ளாமல், இச்செய்திகளைக் குறித்துக் கொண்டுபோய் ஒருவர் மற்றொருவரிடம் கூறி, பரிந்துரையும் செய்கின்ற ஒரு பழக்கத்தை இருவருமே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த இருவருக்கும் மூத்தவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் துரைசாமி முதலியார். இந்த மூவருமே எனது நண்பர்கள்.

எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில: (அ) கடந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள், (ஆ) 1917ல் இருவரும் நீதிக்கட்சியில் சேர்ந்தது. (இ) இருவருமே 1941-ல் விலகியது. (ஈ) இருவருமே அரசியலில் இருந்து விலகியதும் தொழில் துறையில் இறங்கியது.

அக்காலத்து அரசியலில் இருந்து தொண்டு செய்தவர்களில், பலர் மறைந்து நாங்கள் இருவருமே மீதியாக இருந்தோம். இன்று நான் மட்டுமே மீதியாக இருக்கிறேன்.

எ.ந.—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/98&oldid=986167" இலிருந்து மீள்விக்கப்பட்டது