பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


ஒருவாறு எல்லோரையும் சமாதானப்படுத்தினர். கச்சேரியை நிறுத்தச் செய்தார். ஆர்மோனியம், மிருதங்க வித்துவான்களை வீட்டுக்கழைத்துச் சென்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வழக்கறிஞர் எந்த வம்புக்கும் வருவதேயில்லை.

தங்கை பிறந்தநாள்

1921ஆம் ஆண்டு டிசம்பர் கடைசி நாள். அன்று அபிமன்யு சுந்தரி மாலை நாடகம்; நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்னயார் எல்லோருக்கும் உணவு பரிமாறினார்கள். இரவு ஒரு மணியளவில் உறங்கினோம். ஏதோ சலசலப்புக் கேட்டு விழித்தோம். இரவு மூன்று மணிக்கு, எங்களுக்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்திருப்பதை அறிந்தோம்; மகிழ்ந்தோம்.

காமாட்சியம்மன் கோயில் தெருவில் குடியிருந்தால் தங்கைக்குக் காமாட்சி எனப் பெயரிடப் பெற்றது தங்கை பிறந்த இரண்டாம் நாள் முதன் முதலாக வீடு பெருக்குவதற்கு ஒரு வேலைக்காரியை நியமித்ததாகத் தந்தையார் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். எனவே ஏழு குழந்தைகளுக்குத் தாயாகும் வரையில் எங்கள் வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமே இல்லாதபடி அன்னையாரே யாவற்றையும் கவனித்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

எங்கள் அன்னையார் ஒர்.அபூர்வப்பிறவி. அவர்கள் காலையில் எழுந்திருப்பதையும் இரவில் உறங்குவதையும் நான் பார்த்ததே யில்லை. நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெந்நீர் தயாராயிருக்கும். அவர்களேதாம் குளிப்பாட்டி விடுவார்கள். எங்கள் எல்லோருக்கும் தலைமுடி நீளமாக யிருக்கும். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் நாட்களில் பெரியண்ணாவுக்கும் தாயார் தாம் தலை தேய்த்து விடுவார்கள். அவர்கள் எப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்வார்களோ எங்களுக்குத் தெரியாது. இயந்திரம் போல் சதா வேலை செய்து கொண்டே யிருப்பார்கள். அவர்கள் பிரசவ அறையிலிருந்த நாட்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். தையல் வேலை முத்துக்கன்னி மேஸ்திரி எங்களுடன் குடியிருந்தா ரென்று குறிப்பிட்டேனல்லவா? அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது மனைவியார் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்.