பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


தான் இறங்கினோம். குதிரை வண்டிகள் பெட்டி வண்டிகளைப் போல் அழகாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்தபின் நான், பிறந்த ஊரையே பார்த்ததில்லை. காணும் காட்சியெல்லாம் புதுமையாக இருந்தது. எல்லோரும் இரண்டு வண்டிகளில் ஏறியதும் ‘புத்தன் சந்தை’ என்ற இடத்திற்கு வண்டியை விடச் சொன்னார் தந்தையார்.

ஆம், புத்தன் சந்தையில்தான் எங்கள் உறவினார்கள் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் பிறந்த இடமும் அதுதான். தந்தையார் தம் தம்பிக்குக் கடிதம் எதுவும் எழுதாமல் திடீரென்று புறப்பட்டதால், அவர் தங்கியிருந்த இடம் தெரியாமல் தேடினார். கடைசியில் எப்படியோ ஒருவகையாக எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை, தம் மனைவியுடன் குடியிருந்த வீட்டைக் கண்டு பிடித்தோம். சிற்றப்பா சர்க்காரில் ஏதோ ஒரு ‘பியூன்’ வேலையில் இருந்தார்.அடிக்கடி வெளியூர் போகவேண்டிய வேலை. நாங்கள் போன சமயம சிற்றப்பா வெளியூர் போயிருந்தார். அவர் அப்போதுதான் புதிதாகத் திருமணம் செய்திருந்தார். அக்கம் பக்கத்திலுள்ள உறவினார்கள் சித்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சிற்றப்பா மிகுந்த வறுமை நிலையிலிருந்தார். அவர் குடியிருந்த வீடும் எல்லோரும் தங்குவதற்கு வசதியாக இல்லாதிருந்தது. அருகிலேயே வேறு வீடு பார்த்துக் குடியேறினோம். இரண்டு நாட்களில் சிற்றப்பா வந்து சேர்ந்தார். நீண்ட காலத்திற்குப்பின் சந்தித்த அப்பாவும், சிற்றப்பாவும் எதுவும் பேசாமல் கண்ணிர் விட்டுக் கொண்ட காட்சி, இன்னும் என் நினைவில் இருக்கிறது.

திருவண்ணாமலையில்

வாக்களித்தபடி ஒரு வாரம் கழிந்து விட்டது. கோபால பிள்ளையுடனும் பெரிய அண்ணாவுடனும், நானும் சின்னண்ணாவும் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். சிற்றப்பாவும் எங்களுடன் சிதம்பரம் வரை துணைக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பினார். கம்பெனி திருவண்ணாமலைக்கு இடம் மாறியது. திருவண்ணாமலையில் நாடகம் பிரமாதமான வசூலில் நடை பெற்றது. சத்தியவான் சாவித்திரி நாடகத்திற்கு நல்ல பேர். அந்த நாடகம் பலமுறை நடிக்கப் பெற்றது.