பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170


பாக நடந்தது. எம். ஆர். சாமிநாதனுக்குச் சிறிதும் குறைவு படாத முறையில் என். எஸ். கிருஷ்ணன் அன்று வசந்தனாக நடித்தார். எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். அன்று முதல் எம். ஆர். சாமிநாதன் புனைந்து வந்த எல்லா வேடங்களையும், என். எஸ். கிருஷ்ணனுக்கே கொடுத்தார் பெரியண்ணா. கலைவாணர், கம்பெனியின் நிரந்தர நகைச் சுவை நடிகரானார். 1956இல் இராஜா அண்ணாமலை மன்றத்தில் இராஜராஜசோழன் நாடகம் நடந்தபோது கலைவாணர் தலைமை தாங்கினார். அப்போது இந்தச் செய்திகளையெல்லாம் மேடையிலேயே வெளிப்படையாக அவர் கூறி, என்னைப் பாராட்டிய போது எங்கள் இருவர் கண்களும் கலங்கின.

சின்னையாபிள்ளை வருகை

காரைக்குடியில் நல்ல வசூலில் கம்பெனி நடந்து கொண்டிருக்கும் பொழுது சின்னையாபிள்ளை வந்தார். நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களில் பலரும் பழனியாபிள்ளையின் ஸ்ரீ மீன லோசனி பால சற்குண நாடக சபைக்குப் போய் விட்டதாகக் கூறினார். தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபை மூடப்பட்ட சேதியைக் கேட்டு வருந்தினோம், நாங்கள் சொந்தமாகக் கம்பெனி நடத்த ஆரம்பித்த பிறகுதான் அதிலுள்ள கஷ்டங்களை ஒருவாறு உணர முடிந்தது. பெரியண்ணாவுக்கும் சிற்றப்பாவின் நிருவாகத்தில் கம்பெனியைத் தொடர்ந்து நடத்த இஷ்ட மில்லை. எனவே, நாங்கள் அதுவரை கம்பெனிக்காகச் செலவு செய்த ரூபாய் 2000த்தையும் கொடுத்து விட்டால் கம்பெனியை அப்படியே சின்னையாபிள்ளையிடம் ஒப்படைத்து விடுவதாகப் பெரியண்ணா கூறினார். சின்னையாபிள்ளை அப்போது அதை ஏற்க இயலாத நிலையில் இருந்ததால் போய்விட்டார். மேலும் பல நாடகங்களை நடத்திவிட்டு நாங்கள் கரூருக்குச் சென்றோம்.