பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294


சினிமாத் திரையில் பார்க்கவும் கேட்கவும் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி என் உள்ளம் பூரித்தது.

இவர்தானம்மா உன் கணவர்!

ரெயிச்சூர் ஜங்ஷனில் ஸ்ரீஷண்முகானந்தா டாக்கீசாரின் பங்குதாரர்களில் ஒருவரான திரு, எஸ். கே. மொய்தீன் அவர்கள் பெண் நடிகையர் இருந்த பெட்டிக்கு, எங்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எம். எஸ். விஜயாளுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவர் என்னைச் சுட்டிக் சுாட்டி கே. டி. ருக்மணியிடம், “இவர்தானம்மா உன் கணவர்” என்றார். கே. டி. ருக்மணி சளைக்கவில்லை. அவர் என் தம்பி பகவதியைச் சுட்டிக்காட்டி எம். எஸ். விஜயாளிடம், “இவர்தான் உன் கணவர்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேனகா படத்தில் நூர்ஜஹானக நடிக்கும் கே. டி. ருக்மணியின் கணவனாக நானும், மேனகாவும் நடிக்கும் எம்.எஸ். விஜயாளின் கணவனாகத் தம்பி பகவதியும் நடிக்க ஏற்பாடு செய்திருந்ததை யொட்டி அவர்கள் இவ்வாறு தமாஷாகப் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இளமங்கையர் கணவர் என்ற பதத்தை இவ்வளவு தாராளமாக உபயோகித்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. சில மணி நேரம் அந்த வண்டியில் இருந்துவிட்டுப் திரும்பியவுடன் என் மகிழ்ச்சியெல்லாம் எங்கோ பறந்தோடி விட்டது. மனம் பலவிதமாகக் குழப்பமுற்றது.

இரும்பும் காந்தமும்

ஐந்தாம் தேதி காலை பம்பாய் தாதர் ரயில் நிலையத்தில் இறங்கும்வரை இதைப்பற்றிய நினைவுதான். திரைப்படம் முடிந்து திரும்புவதற்குள், அப்சரஸ் திலோத்தமையால் சகோதரர்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்ட சுந்தோபசுந்தார் கதி எங்களுக்கு நேராதிருக்க வேண்டுமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டேன். அந்தச் சமயம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களைத் தவிர எங்களில் எவருக்கும் மணமாகவில்லை. நாங்களும் எங்கள் குழுவின் ஏனைய நடிகர்களும் துள்ளித் திரியும்