பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344


சென்னையிலிருந்து திரும்பியதும் அவர் என்னிடம் கூறியதைப் பெரியண்ணா காதில் போட்டு வைத்தேன். திருவண்ணமலை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

மனத்தாங்கல் வளர்ந்தது

காரைக்குடியில் நாங்கள் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை. நல்ல வசூலாகும் என்று எதிர்பார்த்த ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகமும் தோல்வி யடைந்தது. அப்போது என். எஸ். கிருஷணனுக்குத் திரையுலகில் அபார மதிப்பிருந்தது. அவரை அழைத்து மேனகா நாடகம் போடலாமென நானும் பகவதியும் பெரியண்ணாவுக்கு யோசனை கூறினோம். பெரியண்ணா அதுபற்றிச் சிந்திப்பதாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் நாங்கள் சற்றும் எதிர்பாராதபடி என். எஸ் கிருஷ்ணன் காரைக்குடிக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சில மணி நேரத்தில் அவரே கம்பெனி வீட்டுக்கும் வந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அவரை அன்புடன் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா வழக்கம்போல் தம் அறையில் அமர்ந்து கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார். என். எஸ். கே. எங்களோடு சிறது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்று பெரியண்ணாவை வணங்கினார். அவர் எப்பொழுதும் புன்னகையுடன் பதில் வணக்கம் புரிந்து விட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசினார். மீண்டும் கணக்கில் கவனத்தைச் செலுத்தினார். இது என். எஸ். கே.க்குப் பிடிக்கவில்லை. தம்மைச் சரியாக வரவேற்று அன்பு காட்டவில்லை யென்று அவர் எண்ணிக் கொண்டார். கம்பெனி வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம். ஆனால் வேறு அவசர அலுவல் இருப்பதாகக் கூறி அவர் புறப்பட்டு விட்டார். காரைக்குடியில் எங்களுக்கும் அவருக்கும் வேண்டிய சில நண்பர்கள் இருந்தார்கள். பெரியண்ணா ஏற்ற முறையில் தம்மை வரவேற்க வில்லையென்று அவர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக அறிந்தோம். இந்தச் செய்தி என் செவிக்கு எட்டியதும் நான் கலைவாணருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில், அவரைப் பழைய கிருஷ்ணனாகவே எண்ணிப் பண்புடன் வரவேற்றதாகவும், பிரசித்த பெற்ற திரைப்பட நட்சத்திரம் என்ற முறையில் ஒரு தனி மரியாதை காட்டும் இயல்பு எப்