பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

379


மிக்க புலவர் நக்கீரனுரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். நாடகத்தின் நடுவே வரும் இக்காட்சி முழுதும் ‘செந் தமிழ் முழங்கும்’ என்று சொன்னால் சிறிதும் மிகையாகது. இறுதியில் நக்கீரர் “தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!! உலகெல்லாம் தமிழ்முழங்கட்டும்!!!” என்ற முழக்கத்தோடு உள்ளே செல்வதும் அவரைத் தொடர்ந்து புலவர் பெருமக்கள் எல்லோரும், “உலகெல்லாம் தமிழ் முழங்கட்டும்!” என்று உரத்த குரலில் எதிரொளிப்பதும் சபையோரைப் புல்லரிக்கச் செய்யும் அற்புதக் காட்சியாகும். சில நாட்களில் இந்த முழக்கத்தில் சபையோரும் உணர்ச்சி வசப்பட்டு “தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க!” என்று முழங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிவலீலா புராண நாடகந்தான் என்றாலும் தருமிக்குப் பொற்கிழி அளித்த இந்தப் படலத்தின் மூலம் தமிழ் உணர்வை மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம்.