பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

461


என்று நகைக்சுவையாகப்பாடி வியப்படைவதுபோல் முடிக்கிறார். இச்சுவை நிறைந்த கவிக்காக ஒரு காட்சியை உருவாக்கி னோம். கவியாக மட்டும் இதனைப் படிக்கும் போது ஏற்படாத ஒரு நிறையுணர்வு காட்சி வடிவாகப் பார்க்கும்போது ஏற்படுகின்றதல்லவா? இப்படியே காளமேகப் புலவரின் நகைச்சுவை பாடல்கள் பலவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தார் சின்னண்ணா. நாடகத்தில் திருவரங்கம் கோயில், மடப்பள்ளி, திருவானைக்கா ஆலயம், முதலிய காட்சிகள் வருகின்றன. இவற்றையெல்லாம் தயாரித்திருந்தோம்.

எமகண்டம்!

இறுதியில் காளமேகம் எமகண்டம் பாடும் காட்சியினைப் பிரமாதமாக அமைத்திருந்தோம். கவி காளமேகம் எமகண்டம் பாடுவதற்குச் சிரமப்பட்டாரோ என்னமோ, எனக்குத் தெரியாது. காளமேகமாக நடித்த நான் எமகண்டம் பாடுவதற்கு உண்மையாகவே சிரமப்பட்டேன். மேலே நான்கு சங்கிலிகளில் கட்டப் பெற்ற பலகையின் மீதிருந்து பாடவேண்டும்.நான் உட்கார்ந்திருக்கும் பீடமோ சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழே பெரிய அக்னிக் குண்டம். அதில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதுபோலத் தந்திரக் காட்சி அமைக்கப் பெற்றிருந்தது. இடையிடையே சாம்பிராணி புகை போட்டு மேலேயிருக்கும் என்னத் திணற அடித்துவிட்டார்கள் காட்சியமைப்பாளர்கள். சுற்றிலும் திருமலைராய மன்னனின் சமஸ்தானப் புலவர்கள் உட்கார்ந்தபடியே பல கேள்விகளைக் கேட்கின்றனார். அவர்கள் கேள்விகனாக் கெல்லாம் உடனுக்குடன் காளமேகம் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே பாடவேண்டும் நான் சிரிக்கத்தான் முயன்றேன். ஆனால் வியர்த்து விறுவிறுத்துப்போன அந்நிலையில் சிரிப்புக்களை முகத்தில் தோன்றியதா? இல்லையா? என்று அன்று நாடகம் பார்த்த ரசிகர்கள் தாம் சொல்லவேண்டும்! ஆம் உண்மை! தாய் மொழியாகிய தமிழின் மீது நான் கொண்டிருந்த எல்லையற்ற பற்றின் காரணமாகத்தான் இந்த எமகண்டத்தைத் தாங்கிக் கொண்டேன். பாடிய பாடல்களின் பொருளிலே உள்ளம் திளைத்திருந்ததால்தான் அந்தச் சிரமம் எனக்குத் தெரியவில்லை.