பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. நிறைவுரை

ஜூன் 23-இல் (2002) தாயகம்-தமிழகம்-திரும்புகின்றேன். என் மகன் நிரந்தரமாகவே இங்கு வந்து தங்குமாறு வற்புறுத்துகின்றான். அவனும் மிகவும் குளிர்ப்பகுதியாக இருக்கும் நியுயார்க் மாநிலத்தை விட்டு அரிசோனா மாநிலத்துக்கு குடியேறுகிறான். (ஜூலை 9 முதல்). அங்கு தமிழகச் சூழ்நிலை (வெப்பம்) இருக்கும் என்றும், மருத்துவ வசதி அமெரிக்காவில் இருப்பதுபோல தமிழகத்தில் இல்லை என்றும் 19 எண்ணுள்ள தொலைபேசியை இயக்கினால் நோயாளர்க்குரிய பேருந்து உடனே வந்து அனைத்தையும் கவனிக்கும் என்றும் கூறுகின்றான். ‘முறைவழிப்படும் ஆருயிரை - உயிரீரும் வாளை - மருத்துவத்தால் காப்பாற்ற முடியுமா? என்ற வினா எழுகின்றது. ஏதோ அவசரத்துக்கு தமிழகத்தில் - நான் வாழும் சென்னை அண்ணா நகரில் கிடைக்கும் மருத்துவ வசதி போதும் என்று எனக்குத் தோன்றுகின்றது. தவிர, அமெரிக்காவில் வந்து - யாதொரு பணியுமின்றி - “உப்பிற்கும் காடிக்கும் கூற்றாக” (குறள் 1050) இருப்பது என் இயல்பிற்குப் பொருந்தாத ஒன்று.

இளமை முதல் இன்று வரை (அகவை 88க்கு புகும் நிலை) சுறுசுறுப்பாகப் படிப்பதும் எழுதுவதும், ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு கல்வி புகட்டுவதும் ஆய்வுக்கு வழிகாட்டுவதும் - இத்தனைக்கும் மேலாக பணியே பரமன் வழிபாடு[1]’ என்றும், அது எனக்குப் பண்டே பரமன் பணித்த பணிவகையே (திருவாய் 10.4:9) என்றும் இடைவிடாது எண்ணியிருக்கும் எனக்கு அமெரிக்க வாழ்வு எப்படிப் பொருந்தும்? புத்தம் புதிய நூல்கள் தாம்’ தமிழ் மொழிப் பன்முக வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்பதும், அதுவே என் பேச்சாகவும் மூச்சாகவும் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்துக்கொண்டு வாழும் எனக்கு தமிழக வாழ்வுதான் மிகவும் பொருத்தம் என்பதும் வெள்ளிடை மலை.

என் எளிய வாழ்வுக்குப் போதுமான ஊதியமும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராகப் பணியாற்றுவதால் கிடைக்கும் சிறு ஊதியமும் (அது நின்றது) எனக்குப் போதுமானவை. ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பது தமிழ் மூதாட்டியின் பொன்மொழியல்லவா? ஒருவகையில் புத்தர்


  1. 1. Work is worship