பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

756

என் சரித்திரம்

ஆனால் பின்னதிலுள்ள விஷயங்களை அவரால் விளக்க இயலவில்லை; “இந்த முறையுள்ள பழைய நூல்கள் இக்காலத்து வழங்கவில்லை. இது பிராசீன தர்க்கம்” என்று சொல்லிவிட்டார்.

கும்பகோணம் காலேஜில் ஸம்ஸ்கிருத பண்டிதராக இருந்த பெருகவாழ்ந்தான் மகா மகோபாத்தியாய ரங்காசாரியரிடமும், திருமலை ஈச்சம்பாடி சதாவதானம் ஸ்ரீநிவாஸாசாரியரிடமும் சில வட மொழிப் பிரயோகங்களில் உண்டான ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

மற்றவற்றிற்கெல்லாம் ஒரு வகையாகக் குறிப்புரை எழுதி விட்டு அளவையிலக்கணம் வரும் பகுதியைப் பலமுறை வித்துவான்களுடைய முன்னிலையில் பரிசோதித்து இயன்ற வரையில் சுத்த பாடங்களென்று தோற்றியவற்றைத் தெரிந்து எழுதிக் கொண்டேன். பாடபேதங்களை அங்கங்கே அடிக்குறிப்பில் அமைத்தேன்.

என் உவகை

எல்லாம் சித்தமானவுடன் மணிமேகலையை எடுத்துக்கொண்டு சென்னை சென்று வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் 5-6-1896 அன்று அச்சுக்குக் கொடுத்தேன்.

அடிக்குறிப்பில் நான் எழுதிய குறிப்புரையோடு, புத்தகம் அச்சாகத் தொடங்கியது. முதல் பாரத்தைப் பார்த்து உத்தரவு கொடுத்த போது என் உள்ளத்தில் இருந்த உவகைப் பெருக்கை இறைவனே உணர்வான்! ‘இந்த நூலையும் நாம் பதிப்பிப்போமா!’ என்று அலந்திருந்தவனாதலின் அதற்கு ஓர் உருவும் ஏற்பட்டதைப் பார்த்து என் உள்ளமும் உடலும் பூரித்தன.


அத்தியாயம்—122

நான் பெற்ற பட்டம்

ணிமேகலையின் பதிப்பு நடக்கையில் அந்நூலுக்கு அங்கமாக மணிமேகலையின் வரலாற்றைச் சேர்க்க எண்ணி அவ்வாறே கதைச் சுருக்கத்தை எழுதி முடித்தேன். பௌத்த சமய சம்பந்தமான செய்திகள் இந்நாட்டில் வழங்காமையால் அவற்றை மணிமேகலையின் குறிப்புரையில் அங்கங்கே விளக்கியுள்ளேன். ஆனாலும் தொடர்ச்சியாக அந்த மதக் கொள்கைகளைத் தனியே