பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

179



முதல்வர் அலுவலகத்தில் ஆன்லைன் என்ற தனியார் இணையத்தை கலைஞர் 11.12.2000அன்று துவக்கி வைத்து இருக்கிறார். அதில் எனது கட்டுரையான ‘கிராமங்கள் அன்றும் இன்றும் எனது புகைப்படத்துடன் வெளியாகி இருந்ததாம். அதில் வந்த கட்டுரைகளையும், எழுத்தாளர்களின் பெயர்களையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் எனது கட்டுரையையும் எனது புகைப்படத்தையும் பார்த்தவுடனே, அதை உற்று நோக்கி அடடே நம்ம சமுத்திரம்! என்றாராம். இதை ஆன்லைனில் பணியாற்றும் எனது தோழரும், சிறந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணனும், செய்தித் துறையில் உதவி இயக்குநராக உள்ளவரும், எனது வாடமல்லி நாவலுக்கு காரணமானவருமான, என் இனிய நண்பர் சுபாஷ் அவர்களும் மறுநாள் என்னிடம் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்.

எனக்கு இரட்டை மகிழ்ச்சி. குறள் பீடத்தில் நான் தெரிவித்த கருத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டார் என்கிற ஒரு மகிழ்ச்சி. அப்படியே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் என் மீது வைத்திருக்கும் அன்பு அவரிடமிருந்து வீழ்ச்சி அடையவில்லை என்ற இன்னொரு மகிழ்ச்சி.

இந்தக் காலக்கட்டத்தில் முரசொலி மாறன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மாறன் அவர்களும் ரங்கராஜன் குமாரமங்கலமாக திடுதிடுப்பென்று ஆகிவிடுவாரோ என்பது போன்ற அதிர்ச்சிதரும் செய்திகள் வெளியாயின. இந்தச் சமயத்தில் கலைஞர் கலங்கிப் போனதை தொலைக்காட்சியில் பார்த்த போது என் கண்கள் கலங்கிவிட்டன. கையறு நிலையில் அவர் தவித்த தவிப்பு என்னையும் தவிக்க வைத்தது. என்னை மட்டுமல்ல... மனிதநேயம் மிக்க எல்லோரையும் தவிக்க வைத்திருக்கும். ஆனால், என்னைப் போன்றவர்களின் தவிப்பு தமிழ்நாடு சம்பந்தப்பட்டதும் கூட, ஓணானாய்ப் போன தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க இன்னும் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளாவது தேவைப்படுகிறது. இதற்கு கலைஞர் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், மாறனுக்கு விபரீதமான ஒன்று ஏற்பட்டால் அவரும் வாழமாட்டார் என்பது அவரது ஐம்புலன்கள் மூலமும் வெளிப்படையாக தெரிந்தது. வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் மருத்துவ மனையில் இருந்து