பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எஸ். டி. எஸ்ஸுக்குப் பிறகு பாகவதர் வரும் கட்டம். அவர் வருகிறார் என்று தெரிந்ததும் தியேட்டரில் ஒரே அமைதி; நிசப்தம். பாகவதர் வருவதற்கு முன்னால் அலட்சியமாக ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த தேவுடு அய்யர் இப்போது தம் ஆர்மோனியத்தை மட்டுமல்ல; சட்டையையும் சரிப்படுத்திக் கொண்டு நாலரைக் கட்டை சுருதியை அழுத்தினார். அவ்வளவுதான்; கரகரப்பிரியாவில் மகான் தியாகய்யரின் கீர்த்தனை ஒன்றைப் பாடிக் கொண்டே பாகவதர் மேடையின்மேல் கம்பீரமாகத் தோன்றினார். அதற்குமுன் எத்தனையோ நாடகங்களையும் நடிகர்களையும் பார்த்துப் பார்த்து அலுத்துப்போயிருந்த நான், எம்.கே.டியின் தோற்றத்தைக் கண்டே மெய் மறந்து போனேன். ராஜபார்ட் உடையும், தலையில் கீரிடமும் - அடாடா, அவரையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் போல இருந்தது. கீர்த்தனை முழுவதையும் பாடி முடித்த பின் அவர் தேவுடு அய்யர் பக்கம் வந்தார். சிட்டாசுரம் ஆரம்ப மாயிற்று. ஆஹா அந்தப் போட்டி-எம்.கே.டி.பாட, தேவுடு அய்யர்.அதைத் திரும்பப் பாட, இரண்டு பேரும் மாறி மாறிப் பாடிக்கொண்டே இருந்தார்கள். சபையில் ஒரே அமைதி; நிசப்தம். அப்போது என் பக்கத்திலிருந்த ஒருவர் தம் நண்பரிடம், "கொஞ்சம் பொடி கொடப்பா!' என்று கேட்க, அவர் பொடி கேட்டவரின் தலையில் அடித்து, ஏண்டா, பொடி கேட்கும் நேரமா இது பேசாமல் இருடா என்று அதட்டினார். போட்டி மேலும் வலுத்தது. கடைசி முடுக்கு சிட்டாசுரத்தில் என்னை மறந்து நான் 'ஆஹா என்று வியந்தபடி எழுந்தேன். எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் என் தோளைப் பிடித்து அழுத்தி, உட்காரும்' என்று சொன்னபிறகுதான் எனக்குச் சுய நினைவு வந்தது.