உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


'தாசி என்றால் என்னவென்று சொல்கிறார் தெரியுமா உமக்கு?' என்று தாம் இருப்பது நாடக மேடை என்பதைக் கூட மறந்து சவால் விடுகிறார்.

"என்ன சொல்கிறார்?' என்கிறார் எம்.கே.டி.

தா' என்றால் 'அன்னை 'சி' என்றால் 'லட்சுமி' என்று சொல்கிறார். அதாகப்பட்டது, நாங்கள் அன்னைக்கு அன்னையாகவும், லட்சுமிக்கு லட்சுமியாகவும் இருக்கிறோ மாக்கும்’ என்கிறார் எஸ்.டி.எஸ்.

அவ்வளவுதான்; ரசிகர்கள் மறுபடியும் எம். கே. டி.யைக் கைவிடுகிறார்கள்; எஸ்.டி.எஸ்.ஸ்-க்கு 'சபாஷ்' போடுகிறார்கள்.

அதையும் வரவேற்கிறார் பாகவதர் - ஏன்? அவர் தோல்வியுறுவது ஒர் அழகான பெண்ணிடம் பாருங்கள்!ஆடவர் உலகத்துக்கே உரிய இயல்பு அல்லவா இது?

அம்பா, நீ இரங்காயெனில்...

பதினெட்டாவது வயதிலேயே ஓரளவுக்குச் சம்பாதிக்க ஆரம்பித்தவிட்ட பாகவதர், இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் போலத் தங்களையும் தங்களுடைய நலனையும் மட்டுமே கவனித்துக் கொள்ளவில்லை; தம்மைக் கவனித்துக் கொண்டதோடு, தம்முடைய குடும்ப நலனையும் கவனித்தார். அதன் பயனாக அவருடைய பாட்டனார் விட்டுச் சென்றிருந்த வீட்டின் மேல் வாங்கப்பட்டிருந்த கடன் அடைக்கப்பட்டது; ஒட்டு வில்லை வீடாக இருந்த அந்த வீடு இடித்துத் தகர்க்கப்பட்டு மாடி வீடாகக் கட்டப்பட்டது.

நொடித்துப் போயிருந்த பாகவதருடைய குடும்பம் மெல்லமெல்ல அவரது பெரு முயற்சியால் எழுந்து நிற்க முயன்றுகொண்டிருந்தபோது, அவர் படுத்த படுக்கை யாகிவிட்டார். காரணம், அப்போது ஊரெங்கும் போட்ட பெரியம்மை அவருக்கும் போட்டுவிட்டதுதான்.