பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

15


செய்தார்கள். நன்னன் கொடியவனென்பதை அறிந்தவர்களாகையால், வழக்கம்போலப் பொற்பாவை கொடுப்பதோடு, மேலும் அபராதம் செலுத்த முன்வந்தார்கள். புலவர் பெற்ற யானைகளைத் தொகுத்தார்கள். புதிய பரிசிலும் பெற்றுக் கொணர்ந்தார்கள். எண்பத்தொரு யானைகள் சேர்ந்தன.

பெண் கொலைக்கு உலகமே அஞ்சியது. புலவர் உலகம் மிக அஞ்சியது. எப்படியாவது அதை மாற்ற வேண்டுமென்று நல்லிசைச் சான்றோர் முனைந்து நின்றனர்.

நன்னனை அணுகினர் புலவர் சிலர். “அரசே, பொற்பாவை அவள் குற்றத்துக்கு ; எண்பத்தொரு யானைகள் மன்னர் பிரானது கருணைக்குக் காணிக்கை” என்று சொன்னார்கள்.

“இதென்ன விளையாட்டு ? குற்றம் செய்தவரைத் தண்டிப்பது அரசன் கடமை. குற்றவாளியின் சார்பில் நிற்பவர்கள் குற்றத்திற்குத் துணை செய்பவர்களாவார்கள். புலவர்களானாலும் சரி, அவையத்தாரானாலும் சரி. அவர்கள் தங்கள் பெருமைக்கு இழுக்கைத் தேடிக்கொள்கிறார்கள். உலகமே எதிர்த்து நின்றாலும் இந்தத் தண்டனையை மாற்ற மாட்டேன். பொன்னைக் கண்டும் யானையைக் கண்டும் மயங்கிவிட நான் என்ன சிறு பிள்ளையா?” ---அரசன் எழுந்து போய்விட்டான்.

“அட படுபாவி!” என்றே ஒவ்வொருவர் வாயும் முணுமுணுத்தது.

புலவர் உள்ளம் மறுக, சான்றோர் முகம் வாட, குடிமக்கள் புலம்ப, நன்னன் பெண் கொலை செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/23&oldid=1528950" இலிருந்து மீள்விக்கப்பட்டது