பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பெறுவதற்கு வழிகாட்டிய முதல்வர் வ. வெ. சு. ஐயர் தான். தமிழில் ரசனாபூர்வ விமர்சனத்துக்கு வழிவகுத்த பெருமையும் அவருக்கு உண்டு. இதற்கெல்லாம் அவர் பத்திரிகையைத் தான் பயன்படுத்தினார்.

பாரதியோடு நெருங்கிப் பழகி, பாரதியாரால் தம்பி என அழைக்கப்பட்டவர் பரலி சு. நெல்லையப்பர். அவர், பாரதிக்குப் பிறகு, பாரதி பாதையில், ‘லோகோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். அது தேசீய விஷயங்களையும், உலகச் செய்திகளையும், அறிவுபுகட்டும் கட்டுரைகளையும் வெளியிட்டதுடன் பாரதியின் புகழையும் எடுத்துரைத்தது.

1933-ல் மொழிகளின் மறுமலர்ச்சி ஒளிவீசியது. இந்திய மொழிகள் அனைத்திலும் புதிய பத்திரிகைகள் தோன்றின. காந்தீய நெறிகளைப் பரப்ப முயன்றதோடு, எழுத்தில் புதிய புதிய பரிசோதனைகளிலும் அவை உற்சாகம் காட்டின. தமிழிலும் இந்த வேகம் காணப்பட்டது.

சங்கு சுப்ரமண்யன் ‘சுதந்திரச் சங்கு’ என்ற காலணாப் பத்திரிகையை ஆரம்பித்தார். டி. எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். பாரதியோடு வாழ்ந்தவரும், பாரதி பக்தருமான வ. ரா. (வ. ராமஸ்வாமி) டி, எஸ். சொக்கலிங்கம் ஆகியோர் துணையோடு, கே. சீனிவாசன் ‘மணிக்கொடி’ வாரப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினர். ‘ஜெயபாரதி’ என்றொரு காலணா வார இதழும் வந்தது.

இவை தேசீய விடுதலை உணர்வை ஊட்டின; சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தின. தனிமனித உயர்வுக்கான சிந்தனைகளை அழுத்தமாகக் கூறின. அரசியல், பொருளாதார விஷயங்களை விளக்கின. சிறுகதைகளையும்,