பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

நடத்துவதில் ஏற்பட்ட சிரமங்களைத்தான் கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது என்றாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் 1970ம் வருடம் வரையில் மொத்தம் 119 இதழ்களைக் கொண்டு வந்து இருக்கிறார்.

காகித விலை உயர்ந்துவிட்டது என்று கவலைப்பட்டு அந்தக் கவலையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் செல்லப்பா "ஆகவே இந்த இதழ் முதல் எழுத்துவின் விலை 25 காசு உயர்த்தப்படுகிறது” என்று விலையை அதிகரித்துவிடவில்லை. மாறாக “தரம் உயர்ந்த காகிதத்தில் வெளியிட முடியவில்லை. நிலைமை சீரானதும் காகிதம் பழையபடியே தரமானதாக இருக்கும்"என்று தான் கூறுகிறார்.

எனினும் எழுத்தைத் தொடர்ந்து நடத்துவதில் செல்லப்பாவுக்கு சிரமங்கள்தான் அதிகரித்திருக்கின்றனவே தவிர வாசகர்களின் அமோக ஆதரவு பெருகிவிடவில்லை என்பதை எழுத்துக்கு ஒரு வயது நிறைந்த பின் வெளிவந்த இதழ்கள் நிரூபிப்பவையாக இருக்கின்றன.

32 பக்கங்கள் என்பது போய் 24 பக்கங்கள் என்று பக்கங்களைக் குறைக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு அது 16 பக்கங்கள்தான் என்ற அளவுக்கும் வெளிவந்து பத்திரிகையை நடத்துவதில் செல்லப்பாவுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

எத்தனைகஷ்டங்கள் இருந்தாலும் 'எழுத்து' வைத் தொடர்ந்து நடத்தியே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த செல்லப்பா - அந்தக் கஷ்டங்களை - விலையேற்றம் செய்து வாசகர்களின் தோள்களில் மட்டும் இறக்கி வைக்க சம்மதம் இல்லாதவராக இருந்திருக்கிறார். அதனால்தான்9ஆண்டுகள் முடிய - அவர் எழுத்து ஏட்டின் அச்சிடும் காகிதத்தை சற்றுத்தரம் தாழ்ந்த காகிதமாக்கி இருக்கிறார். பக்கங்களை 32 லிருந்து 24,20 என்று குறைத்து 16 பக்கங்கள் தான் என்றும் ஆக்கி இருக்கிறார். ஆனால் அந்த ஒன்பது ஆண்டுகளிலும் 50 காசுகள் விலை என்பதை ஒருபோதும் 60 பைசாவாகவோ 75 பைசாவாகவோ உயர்த்த முன்வரவில்லை. அதே கால கட்டத்தில் பல பத்திரிகைகள் பல தடவைகள் பத்திரிகை அச்சிடும் காகிதவிலை உயர்வு - தயாரிப்புச் செலவில் கூடுதல்

175