பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

போன்றவைகளைக் காரணம் காட்டி சிறிது சிறிதாக விலையை உயர்த்திக் கொண்டே இருந்திருக்கின்றன. ஆனால் செல்லப்பா மட்டும் - தனது கஷ்டத்தை வாசகர்களும் பகிர்ந்து கொள்ளட்டுமே என்று நினைக்கவில்லை. விலையையும் உயர்த்தவில்லை.

2000 பிரதிகளுக்கு மேல் அச்சிடமாட்டேன், சந்தாதாரர்களுக்கு மட்டும்தான் பத்திரிகையை அனுப்புவேன் என்ற குறைந்தபட்ச விற்பனை நோக்கத்துடன்தான் செல்லப்பா பத்திரிகையை ஆரம்பித்தார். தமிழகத்தில் நல்ல படைப்புகளைத் தந்த பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர் அந்தக் கால கட்டத்தில்தான் முற்போக்கு இலக்கிய உலகின் அங்கீகாரம் பெற்று பிரபலம் அடைந்து கொண்டிருந்தார்கள். முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் - நல்லிலக்கியம் படைத்த பெருமைக்குரிய பலர் - மேடைதோறும் -ஏடு தோறும் "தமிழ்மக்களிடையே நல்லிலக்கியங்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது. வெகு ஜனப் பத்திரிகைகளின் மாயையிலிருந்து விடுபட்டு - தமிழ் வாசகர்கள் நல்ல இலக்கியம் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள். என்றாலும் 'எழுத்து'போன்ற நல்லிலக்கிய விமர்சனம் - புதுக்கவிதை வளர்ச்சிக்கான பத்திரிகைக்கு - அதன் ஆசிரியர் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் 50 காசுக்கு மேல் விலையை ஏற்ற மாட்டேன் என்று பிடிவாதமாக பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தபோதிலும் - அவரது அதிகபட்ச விற்பனை இலட்சியமான2ஆயிரம் வாசகர்களையே அது எட்ட முடியவில்லை, அல்லது ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனை என்ற குறைந்தபட்ச ஆசையைக்கூட அதனால் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.

செல்லப்பாவும் தமது பிடிவாதத்தை - நல்ல நோக்கத்தின் அடிப்படையிலான பிடிவாதத்தை-10ஆவது ஆண்டுத் தொடக்கத்தில் சற்றே தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

பத்தாவது ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளிவந்த எழுத்து இதழ் அட்டையே செல்லப்பாவின் நல்ல பிடிவாதம் தளர்ந்து விட்டதை பறை சாற்றுவதாக அமைந்திருந்தது.

எழுத்து 112வது இதழின் அட்டையிலேயே எழுத்து என்ற தலைப்பின் கீழே இலக்கியக் காலாண்டு ஏடு என்ற புதிய சொற்றொடர் இடம் பெற்றிருந்தது.

176