பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



செல்லப்பாவைக் குறை கூறுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். செல்லப்பாவின் கருத்தோ - கதையோ சரியில்லை என்று சொல்ல எல்லோருக்கும் உரிமை இருப்பதுபோலவே அந்த உரிமை செல்லப்பாவுக்கும் உண்டு என்பதுதான்.அது மற்றபடிபிறரது எழுத்து பற்றி செல்லப்பா சொல்லும் கருத்துக்களுக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது. அவர்தமது மனதில் பட்டதை தயவுதாட்சண்யம் பாராமல் பளிச்சென்று சொல்லக்கூடியவராக இருந்தார். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் தந்திரம் அறியாதவராக இருந்தார். கிராமத்து மக்களின் பாணியில் சொல்வதானால் வெகுளி சூதுவாது தெரியாதவர், கள்ளம்கபடமற்ற வெள்ளை உள்ளம் படைத்தவர்.

இனி லா.ச.ராமாமிர்தத்துக்கு செல்லப்பாவிடம் ஏற்பட்ட கசப்பும் இனிப்புமான அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம்.

"செல்லப்பாவும் நானும் முதன்முதலாக சந்தித்த தெப்போ?" சரியாக ஞாபகமில்லை.

எனக்கு 18, 19 வயதில் என் முதல் தமிழ்கதையுடன் ஹனுமான் வாரப்பத்திரிகை (ஆசிரியர் - சங்கு சுப்ரமணியம்) ஆபீசுக்குப் போனேனே. அங்கே அவர் உதவி ஆசிரியராக இருந்தாரே அப்பவா, அப்போது நாங்கள் பேசினதாக நினைவில்லை. எனக்கு அங்கு தி.ஜ.ர.வைத்தான் தெரியும்.

அல்லது மெரினா கடற்கரையில் மணிக்கொடி எழுத்தாளர்கள் மாலை மாலை சந்தித்துப் பேசுவார்களே அப்போதா?

ஒன்று தெரியும். செல்லப்பாவுக்கு என் ஆரம்ப கால எழுத்துக்களைப்பற்றி நல்ல அபிப்ராயமில்லை” இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான் என்று தி.ஜ.ர. என்னை அறிமுகப்படுத்திய போது 'என்ன நல்ல எழுத்து? எதிலும் ஒரு வக்கிரப்பார்வை’ என்று அவருடைய உரத்த குரலில் ஒரு விளாசு விளாசினாரே பார்க்கலாம்! அப்போது அவரிடம் எனக்குக் கண்டநடுக்கம் நாளடைவில் அன்பும் ஆழ்ந்த மரியாதையாகவும் மாறுபட்டாலும், இப்பவும்,எப்பவும் அவரிடம் எனக்கு சற்று பயம்தான். காரணம் அவருடைய நேர்மை (honesty) என்று இப்போது உணருகிறேன்

- என்று குறிப்பிடும் லா.ச.ரா மேலும் தமது கசப்பான அனுபவத்தை விவரிக்கிறார்.

191