பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

சொல்லிக்காட்டி இது அந்த வழியானதா என்று திரும்பத் திரும்ப கேட்டேனே தவிர பழமை தவறு என்று சாதிக்க முற்படவில்லை. அதுக்கு மாறாக பழமையில் இலக்கண மீறுதலால் இவ்வளவு உருவ வகைகள் தோன்றி இருக்கு அதோடு புதுக்கவிதைகளும் சேர்க்கத்தக்கது என்று அறிவுறுத்துவதே நான் விரும்பியது. விதிவிலக்கு கோணங்கள் தான் பிறகு புறநடையாகவும் ஒழிபியலாகவும் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்டு, புது புற நடைகளுக்கும் ஒழிபியலுக்கும் இடம் விட்டுக்கொண்டே இருக்கும், அப்படிச் சேரச்சேர புதுக்கவிதையும் மரபானதாக ஆகிவிடும் என்பது என்கருத்து; ஆகவே பழய இலக்கியங்களை இலக்கணக்கோணல்கள் என்று நான் கருதவில்லை. பார்க்கப்போனால் கோணலும் கோணமும் வரவேற்க வேண்டியவைகள். கலைஞனுக்கு கோணல் பார்வை (:டிஸ்டார்ஷன்) அவசியம்தான். இல்லாவிட்டால், மற்ற சாதாரண மனிதனிலிருந்து அவன் மாறுபட்டு இருக்கமாட்டான். எப்போது நான் பழய இலக்கணத்தை மதித்து குறிப்பிட்டிருக்கிறேனோ புதுக்கவிதையையும் அதன் வழி சேர்க்க இலக்கண ரீதியாகப் பார்ப்பது தவறில்லை. காப்பாற்ற வேண்டுமா, வேண்டாமா என்கிற பிரச்னையில்லை இங்கே, இலக்கியம் இலக்கணத்தை மீறி தன்னை காப்பாற்றிக்கொள்ளும். இலக்கிய - இலக்கண உறவு இதை நிரூபித்திருக்கிறது. புலமையைக் கொண்டு பழமையைக் காப்பாற்றுவதாக கொடி கட்டுபவர்களுக்கு பதில் என் கட்டுரை. அதே புலமை புதுமைக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறேன். எனவே புலமையைக் கொண்டு புதுமையையும் பார்ப்பது தவறில்லையே.

இன்னொரு அன்பர் உதாரணச் செய்யுள்களையே நான் உதாரணம் காட்டி அவை எல்லாம் மட்டரகம் என்று காட்டுவதாகவும் அவை உயர்ந்த கவிதைகள் இல்லை. வேறு சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்டினால் தான் அந்த உருவங்கள் பற்றி நன்றாக பார்க்க முடியும், என்று கருத்து தெரிவித்திருக்கிறார். நான் கவித்வம் என்கிறோமே கவிதையின் உள்ளடக்கச் சிறப்பு, அதுபற்றி பேசுவதானால் தான் மட்டரகமான கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வது தவறாகும். இங்கே இலக்கணத்துக்கு உதாரணம். எனவே இலக்கண விதிகளை கடைப்பிடித்து மட்டும் ஒரு உதாரணத்தைச் சொல்லி இருக்கையில் அந்தவித இலக்கண வழி