பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

'முறைப்பெண்' என்ற நாடகத்தை எழுதி, நூலாக வெளியிட்டார்.

ஜல்லிக்கட்டுவை ஆதாரமாகக்கொண்ட ‘வாடிவாசல்’ எனும் குறுநாவல் தனிப்புத்தகமாக வந்துள்ளது. 'எழுத்து'வில் சோதனை ரீதியில் அவர் எழுதிய ஜீவனாம்சம் நாவலும் பிரசுரமாயிற்று. அவருடைய இறுதிநாட்களில் 'சுதந்திர தாகம்’ என்கிற மாபெரும் நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்தது.

இவை எல்லாம் தமிழ் வாசகர்களிடையே உரிய கவனத்தைப் பெறவில்லை. அது செல்லப்பாவின் குறை அன்று.

சி.சு. செல்லப்பா சதா பேச்சிலும் செயலிலும் இலக்கிய உணர்வுடனேயே வாழ்ந்தார். வாழ்க்கையில் முன்னேற விரும்பிச்செயலாற்றுகிற பலரைப் போல, எழுத்து வேறு, வாழ்க்கை வேறு என்று அவர் நடந்து கொண்டதில்லை. அதனால் வறுமை நிலையை விரும்பி ஏற்றுக்கொண்டார். எச்சமயத்திலும் அவர் மனஉறுதியோடும் பிடிவாதத்துடனும் நேர்மையுடனும் வாழ்ந்து காட்டினார். ஒரு போதும் அவர் நம்பிக்கை இழந்ததில்லை. கடுமையாக உழைப்பதில் அவர் உற்சாகம் கொண்டிருந்தார். உயர்ந்த எண்ணங்களும் எளிய வாழ்க்கை முறைகளும்கொண்டு வாழந்து, மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், தனிமாண்பும் சேர்க்கும் உயர்ந்த மனிதர்களில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர்.

‘நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல், கடைசிவரை, நேர்மையாக வாழ்ந்து விட்டேன். இந்த திருப்தி எனக்கு இருக்கிறது' என்று செல்லப்பா தனது இறுதிக்கட்டத்தில் என்னிடம் சொன்னார்.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர் எழுதி வைத்துள்ள ‘எழுத்துக்களம் விமர்சனத் தோட்டம்' ஆகிய நூல்கள் அச்சுவடிவம் பெறவில்லையே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.

ஆயினும், அவர் செய்து முடித்துள்ள இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சி.க. செல்லப்பாவுக்கு சிறப்பான தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில்சந்தேகம் இல்லை.

29