பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39
அதிகமான்

உங்களையே அவ்வாறு கொள்கிறேன்" என்று பணிந் தான் அதிகமான். ஒளவையாரும் உடன்பிறந்தானை விட மிக்க அன்போடு அவனிடம் பழகலாயினர்.

நீண்ட காலம் வாழச்செய்யும் நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தான் அதிகன் என்ற செய்தி தமிழ்நாடு எங்கனும் பரவியது. புலவர்கள் அவனைப் பாராட்டும்போது நெல்லிக்கனி வழங்கிய பெருஞ் செயலைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

*

திருக்கோவலூரில் காரி என்ற வள்ளல் இருந்தான். அவன் முடியுடை மன்னர்களுக்குப் போரில் துணையாகச் சென்று போரிட்டு வெற்றிபெற வைக்கிறவன். அக்காலத்தில் சேர நாட்டை ஆண்டிருந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரன். அவனுக்குக் கொல்லிமலையைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவா இருந்தது. கொல்லிமலையைச் சார்ந்த ஒரு பகுதியை ஓரியென்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன்மேல் போர் தொடுக்க விரும்பிய சேரன், காரியைத் தன் படைக்குத் துணையாக வரும்படி ஆள் விட்டு அழைத்தான். காரி சேரமானைப் போய்ப் பார்த்துப் பேசினான். "ஓரி சிறிய நாட்டுக்குத் தலைவன். அவனோடு போரிட நீங்கள் போகவேண்டியதில்லை. நான் என்னுடன் இருக்கும் வீரர்களுடன் சென்று அவனை வென்று வருகிறேன்" என்றான். பெருஞ்சேரல் இரும்பொறை அப்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டான்.

உடனே காரி ஓஒரியின்மேல் போர் தொடுத்தான். அப்போரில் ஓரி உயிர் இழந்தான். அவனுடைய கொல்லிக் கூற்றத்தைக் காரி சேரமானுக்கு வழங்கினான்.