படகு தள்ளும் பாட்டு—2
தள்ளடா, தள்ளடா, படகைத் தண்ணிமேல் தள்ளடா;
கச்சாங் காத்துக் கரைகொண் டடிக்குது;
கப்பல்ல முப்பல்ல மலையிலே பறக்குது;
அச்சு முறிஞ்சது; ஆணி கழண்டது;
நாகூரு வேலையும் தரித்தண்டா வேலையும்
ஓடிய பாய்வலித்து—அப்பனே—ஓடிய பாய்வலித்து (தள்ளடா)
பச்சைப் பவளமடா, பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? [பால்குடிக்க வந்தானோ?]
தம்பி பிறந்தானோ? தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாமா முன்எல்லாம் கச்சலா ஏடுகட்ட?
பார்க்கலாமா முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட?
ஏடு தவறாது; எழுத்தாணி கீறாது;
பண்ணினவன் பாவமது பாம்பாய்ப் புரளுறானே;
பாம்பேறா மண்டபமோ? பத்துவிலாக் கோபுரமோ?
கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க;
சிதம்பரத்தைக் கண்டவங்க சேனைதவம் செய்தவங்க.
சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க;
கும்பு பெருத்தவண்டா, குணங்கெட்ட ராவணங்க;
ராவணன் சேனைஎல்லாம் ராவாப் பயணமிடப்
பாட்டாளி சேனையெல்லாம் பகலாய்ப் பயணமிடப்
பயணம், பயணமடி; பத்தாவுந் தான்பயணம்;
சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்;