அரிச்சந்திரன் ஏற்றப்பாட்டு
பிள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்;
மழைவரக்கண் பாரும்; மகாதேவர் மகனே,
விக்கினரே, வாரும்; சர்க்கரைகற் கண்டு
முக்கனியும் தேனும் முள்ளுடன் பலாக்காய்,
முடிச்சுடன் கரும்பு, அதிரசம் வகைகள்,
அவல்கடலை தேங்காய், அப்பனே, உனக்கு
ஒப்புடன் படைப்பேன்; உன்னைத்தொழு வோர்க்கு
என்றும்துணை செய்வாய், ஈசுவரன்றன் மகனே,
ஒருபதியால் ஒண்ணு.
ஆரப்பூங் கோயில் அம்மனைத் தொழுதேன்;
அம்மனைத் தொழுதேன்; அரிச்சந்திர புராணம்
என்னா லானமாத்திரம் ஏத்தப்பாட்டாய்ப் பாடத்
தப்புபிழை யானால் சகலரும் பொறுப்பீர்;
இருபதியால் ஒண்ணு.
இந்திரரும் தேவர் ரிஷிகள்முனி வோரும்
கொலுசபை இருந்தார்; தேவேந்திர ராஜன்
முனிவரரைக் கேட்டான் (முந்திமுகம் பார்த்து);
பொய்சொல்லாத பேர்கள் பூலோகத்தில் உண்டோ?
முப்பதியால் ஒண்ணு.
பூதலம் அறிந்த முனிவர்கள் உரைத்தார்;
அயோத்தியை ஆளும் அரிச்சந்திர ராஜன்
என்னுடைய சீஷன் பொய்என்ற வசனம்
நாவினால் உரையான். நல்லது வசிஷ்டா,
அவன், நாவுதப்பா னென்று நானறிய உரைத்தாய்.
அவனுடைய நெஞ்சை அறிந்தவன்போல் சொன்னாய்;
பித்தம்தலைக் கேறிப் பினத்துகிறாய் போடா;
காற்பதியால் ஒண்ணு.