ஏலக்காய்ச் செடிக்கு ரோசம் அதிகம்
ஏலக்காய்ச் செடி உணர்ச்சி மிக்கது; நுட்பமானதுங் கூட!
ஆகவேதான், ஏலக்காய்ப் பயிர்விளைச்சல் மேன்மையும் மேம்பாடும் அடைவதற்குச் சீரானதும் சமமானதுமான சுற்றுச் சார்புச் சூழ்நிலை அமைப்பு உயிர்நாடியாகவும் விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவதற்கும் உருவாக்கப்படுவதற்கும் பசுமையான காடுகளும் காட்டுமரங்களும் நிரம்பவும் துணை செய்கின்றன. இந்நிலையிலேதான், தென் இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சார்ந்த மேற்கு மலைத் தொடர்ச்சியிலுள்ள மரங்கள் மண்டிச் சூழ்ந்த வனப்புறங்களிலே, ஏலக்காய்ச் செடிகள் தழைத்தும் செழித்தும் ஆரோக்கியமாக வளரவும் வாழவும் ஏதுவாகிறது அல்லவா!
ஏலச்செடிக்கு ரோஷம் அதிகம்!
சகாயமான இயற்கையின் சூழல்
ஒரே சீராகப் பகிர்ந்து அளிக்கப்படும் வகையிலும் பரவலான முறையிலும் மழை பெய்வதன் விளைவாகவும் ஏலச்செடிகள் நன்கு வளர்ச்சி அடைகின்றன; கூடுதலாகப் பெய்யும் மழையை விடவும், பரவலாகப் பெய்கிற மழைதான் செடிவளர்ச்சிக்கு ஏற்றதாக அமையமுடியும்.