பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

என்றும் நின்று நிலைக்கும் இணையிலாச் செழுமையோடு செய்து உதவிய சங்கச்சான்றோர்களுக்கும், அவர்களைப் போற்றிப் புரந்து காத்துநின்ற அந்நாளையத் தமிழ் மன்னர்களுக்கும், வள்ளல்களுக்கும், தமிழினம் மிகப்பெருங் கடன்பட்டிருக்கின்றது.

சங்கத் தொகை நூற்களுள், எட்டுத்தொகை என்னும் நூல்களுள் ஒன்றாக ஒளிர்வது இந்த ஐங்குறு நூறு என்னும் அமுதத் தமிழ்கடல் ஆகும். அடி அளவாற் குறுமையேனும், விரிக்கும் பொருள் நயத்தாலும், விளக்கும் உணர்வுக் களங்களாலும், உரைக்கும் உரைப்பாங்கினாலும், மிக உயர்ந்து நிற்பது இத் தொகைநூல் ஆகும். குறுமுனிவனின் தமிழ்ச் செவ்வியேபோல, இக் குறுநூறுகள் ஐந்தும், உணர உணர உணரும் உள்ளத்தே ஒவியங்களாக விரிந்து விரிந்து, அக்கால மாந்தரோடே நம்மை ஒன்றுகலக்கச் செய்யும் ஒப்பற்ற சொற் சித்திரங்களாகும்.

ஒத்த அன்பினரான தலைவனும் தலைவியும் தாமே தம்முட் கண்டு காதலித்துக் களவுறவிலேயும் ஒன்றுகலந்துவிடுகின்ற கலப்பிலே, அவர்பால் எழுகின்ற உணர்வலைகளின் முகிழ்ப்பிலே, அலையாகச் சுழித்து எழுகின்ற எண்ணற்ற நினைவுகளையும், அவற்றின் நடுவாக நின்றியக்கும் பண்பாட்டு மரபினையும், இச்செய்யுட்களிலே நாம் கண்டுகண்டு களிக்கலாம். அந்தக் களவு உறவு பல காரணங்களாலே இடையீடு படப்பட, அவர் தம் நினைவுகள், உணர்வுகள், கனவுகள், மனக்கட்டவிழ்ந்த வாய்ப் பரவி விரிதலையும், அவற்றால் அந்தக் காதலர்களும் அவருக்கு அணுக்கரானோரும் எய்தும் இன்பதுன்பங்களையும் இந்நூற் செய்யுட்களிலே நாம் காணலாம்.

இஃதிஃது இன்னதொரு தன்மைத்து என்று புறத்தார்க்கு முற்றவும் புலனாகுமாறு விளக்கிச் சொல்ல இயலாததாய், அவரவரும் தத்தம் உள்ளத்தேயே நுகர்ந்துநுகர்ந்து தோய்வதாய் விளங்குவதே அகப்பொருள் இன்பம் ஆகும். சொற் கடந்து நின்று, மக்களின் வாழ்வியலின் மூலக்களனான மனையறத்துக்கே அடிப்படையாக விளங்கும் இந்த உணர்