பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



100

ஐங்குறுநூறு தெளிவுரை


53. துறை எவன் அணங்கும்?

துறை : தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இது பரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி. தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்ததுகொல், நினக்கு இவ் வேறுபாடு?' என்று வினையினாற்கு. அவள் சொல்லியது.

[து. வி. : தலைவனோடு சென்று புனலாடியபோது, அத்துறை. முன்பு பரத்தையோடு கூடிக்களித்தானாக அவன் ஆடியதென்ற நினைவு மேலெழத், தலைவி அந்நினைவாலே வாடி மெலிந்தாள். 'தெய்வங்கள் வாழும் துறை என்பதால் நீ அஞ்சினாயோ?' எனத் தலைவன், அவளிடம் அதுகுறித்துக் கேட்கிறான், அவள் நினைவை மாற்றுதல் கருதி. அப்போது தலைவி, அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

துறைஎவன் அணங்கும் யாமுற்ற நோயே?-
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்

பழன ஊர! - நீயுற்ற சூளே!

தெளிவுரை : அணையை அழித்துக்கொண்டு வேகமாக வருகின்ற புதுப்புனலாது, கழனியிடத்தே வந்தும் பாய்ந்ததென்று கலங்கித், தாமரைப் பூக்கள் மலர்கின்ற, பழனங்களையுடைய ஊரனே! நீ என்பால் உரைத்ததுபோன்ற சூளுரையினையே நின் பரத்தைக்கும் உரைத்திருப்பாய் என்று நினைத்து, அது பொய்த்த நின்னைத் தெய்வம் வருத்துமோ எனக் கலங்கி, யான் கொண்டதே இந்த மனநோய். துறையிடத்துத் தெய்வம் என்னை எதன்பொருட்டு வருத்தி நோய் செய்யுமோ?

கருத்து: 'சூள்பொய்க்கும் நின்னைத் தெய்வம் வருத்தாதிருக்கவேண்டும்' என்றதாம்.

சொற்பொருள்: துறை - துறைத் தெய்வம்; நீர்த்துறைக்கண் தெய்வங்கள் உறையும் என்பது மக்களின் நம்பிக்கை. எவன் அணங்கும் - எவ்வாறு வருத்தும். சிறை - அணை. சூள் - சூள் உரையாகிய உறுதிச்சொற்கள். பழனம் - ஊர்ப் பொது நிலம்.