பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

ஐங்குறுநூறு தெளிவுரை


விளக்கம் : நீரிலே திளைத்தாடும் எருமையின் முதுகிலே சிறார்கள் பலரும் அமர்ந்து வருகின்ற தோற்றத்தை, மக்களை ஏற்றியபடி நீரில் மிதந்துவரும் அம்பிக்கு (படகுக்கு) நிகராகக் கண்டனர். இஃது தலைவனும் அவ்வாறே பரத்தையர் பலருக்கும் களித்தற்கு உரியனாக விளங்கும் இயல்பினனாவான் என்று சுட்டிப் புலந்ததாம். தனக்குரியனாகிய நீதான் அவ்வாறு பிறர்க்கும் உரியனாகி ஒழுகும் தன்மை பொறாதாளான தலைவி, நின்னைக் கடிதலும் பொருந்துவதே, செயவேண்டுவதே. என்கின்றாள் தோழி!

தம் குலமரபிற்குப் பழியென்று கருதி நின் தந்தையும் தாயும் நின்னைக் கடிவதினும், நின்னையே துணையாகக் கொண்டு மனையறம் பூண்டவள், நீதான் அது சிதைப்பக்கண்டு, நின்னை அவரினும் பெரிதாகக் கடிதலும் வேண்டுவதே, என்பதுமாம்.

ஒண்தொடியும் மடப்பமும் கொண்ட இவளும் கடிந்து உரைக்கும்படியான இழிவுடைய நடத்தை மேற்கொண்டது. அத் தலைவியால் மட்டுமின்றி, எம்போல்வாராலும் கண்டித்தற்குரியது என்கின்றனளும் ஆம்.

உள்ளுறை: ஆம்பி தன்மேற் கொண்டாரையெல்லாம் கரை சேர்த்து இன்புறுத்துவது: அதுவே தொழிலாக உடையது; நீராடும் எருமையோ தன்மேல் ஏறியிருக்கும் சிறுவர்பற்றி எதுவும் கருதாமல், தான் நீராடும் இன்பிலேயே முற்றத் திளைத்து இன்புறுவது. இவை தலைவனின் வரைகடந்த பரத்தைமைக்கு நல்ல உவமைகளாயின. அவன் பரத்தையர் தரும் இன்பமன்றி, அவர் வாழ்வுநலம்பற்றி யாதும் அக்கறையற்றவன் என்பதும் கூறினளாம்.

99. நோய்க்கு மருந்தாகியவள்! துறை : தோழி முதலாயினோர், தலைமகன் கொடுமை கூறி விலக்கவும், தலைமகள் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது.

[து. வி.: தலைமகன், தலைவியைப் பிரிவுநோயாலே வாடச்செய்து, பலநாளும் பரத்தையர் சேரியே தன் வாழிடமாகக் கொண்டு விளங்கினதால், அவள் தோழியரும் பிறரும் அவன்பால் வெறுப்பும் சினமும் மிக்கவராயினர். ஒருநாள் அவன் தன் மனைக்கு வர. அவனோடு உறவுவேண்டாதே அவனை விலக்குக என அவரெல்லாம் தலைவிக்கு உரைத்தவராக, இடைப்புகுந்து அவளை விலக்குகின்றனர்; தலைவியோ, அவனை