பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

197


[து. வி. தலைவன் தலைவியரின் களவுக்காதற் சந்திப்புக்கள் தொடர்ந்து நிகழவில்லை. இடையிடையே பலநாட்கள் அவன் வாராதானாக, இவர்கள் ஏமாற்றத்தோடு வீடு திரும்பலும், அதுகுறித்து வருந்தி வாடுதலும் நிகழ்ந்தன. ஒரு நாள். குறித்தவிடத்தே வந்து. தலைவியும் தோழியும் இருப்பதைக் கண்டவன், தோழியை விலகச்செய்யும் குறிப்பொலியை அருகே ஒருசார் மறைந்திருந்து எழுப்புகின்றான். அப்போது தலைவி, அவனும் கேட்டுத் தம்முடைய துயரநிலையை உணரும் படியாகத், தான் தன் தோழியிடம் சொல்வது போலச் சொல்லும் செய்யுள் இது.]

அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவங் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்

மடலம் பெண்ணை அவனுடை நாட்டே?

தெளிவுரை : வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக: நம் காதலனை நம்பால் வரைந்து வருவதற்குக் காணப் பெறாதேம் நாம் ஆயினேம்; அதனால், கடல்நாரை தங்கியிருந்து ஒலித்தபடியே யிருக்கும், மடல் பொருந்திய பனைகளைக் கொண்ட அவனுடைய நாட்டிற்கு, நாமே சென்று அவனைக் கண்டு நம் துயரைச் சொல்லி வருவேமோ?

கருத்து: 'அவன் நம்மை வரைதற்கு நினைத்திலனே' என்பதாம்.

சொற்பொருள்: நேரேம் - நேராக வருதலைக் காணப்பெற்றிலேம். கடலின் நாரை - கடற் பாங்கிலே வாழும் நாரை. இரற்றும் - பெரிதாகக் குரலெடுத்து ஒலிக்கும். பெண்ணை - பனை. செல்குவம் கொல்லோ - செல்வோமா?

விளக்கம்: 'நாமே செல்குவம் கொல்லோ?' என்றது, நம்மால் அவனைப் பிரிந்து உயிர்வாழ்தல் என்பது இயலாமையினால், அவன் நம்மை மறந்திருந்தானாயினும், அவனை மறவாதே, வாடி நலனழிந்து நலியும் நாமாவது, அவனைப் போய்க் காண்பேமா என்றதாம். இதனால் தலைவியின் ஏக்கத்தையும் காதல்மிகுதியையும் உணரும் தலைவன் அவளை வரைதற்கு விரைவிற் கருத்துக்கொள்வான் என்பதாம்

'கடலினாரை யிரற்றும்' என்பதற்குக் கடல்முழக்கினைப் போன்று நாரைகள் குரலெழுப்பும் என்று பொருள் கூறலும்