பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. வெள்ளாங் குருகுப் பத்து

வெள்ளாங் குருகின் செய்திகள் வந்துள்ள பத்துச் செய்யுட்களைக் கொண்டமையால், இப் பகுதி இப் பெயரினைப் பெற்றுள்ளது.

'துறைபோது அறுவைத் தூமடி யன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகு' என, நற்றிணை இக் குருகினை நமக்கு அறிமுகப்படுத்தும். கடற்கரைகளில் மிகுதியாகக் காணப்பெறும் கடற்பறவை வகைகளுள் இவையும் ஒன்று.

'வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை' என்னும் இரண்டு அடிகளும், பத்துச் செய்யுட்களினும் தொடர்ந்து வருகின்றன.

வெள்ளாங் குருகு என்றது பரத்தையாகவும்,
பிள்ளை என்றது அவளோடு தலைமகனுக்கு உளதாகிய ஒழுக்கமாகவும்,
காணிய சென்ற மடநடை நாரை என்றது வாயில்களாகவும், செத்தென என்றது அவ்வொழுக்கம் இடையிலே நின்றதாக எனவும்

பொதுவாகக் கொண்டு -

தலைமகன் ஒரு பரத்தையோடு மேற்கொண்டிருந்த ஒழுக்கமானது இடையிலே நின்றுவிட்டதாக, மீண்டும் அவள் உறவை நாடிய தலைவன் வாயில்கள், அவளிடம் சென்று பேசி, அவளது நெஞ்சம் நெகிழ்த்த தலைவன்பாற் செல்லுமாறு நயமாகச் சொல்லுவதாகவும் உள்ளுறை பொருள் கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு பழைய உரையாளர் விளக்கி, இதற்கேற்பவே பொருள் கொள்வர். உரைப் பெரும் பேராசிரியரான சித்தாந்தச் செம்மல் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களோ, 'செத்தென’ என்பதற்குப் 'போலும்' என்று பொருள் கொள்வர்.

'வெள்ளாங்குருகின் பிள்ளையைத் தன் பிள்ளையென்று கருதியதாய்க் காணச் சென்ற மட நடை நாரை' என்பது