பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. தொண்டிப் பத்து

பாண்டியர்க்குக் கொற்கையும், சோழர்க்குப் புகாரும் போன்று, சேரர்க்குரிய புகழ்பெற்ற கடற்கரைப் பேரூராக அந்நாளிலே விளங்கியது தொண்டிப் பட்டினமாகும். இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும் தொண்டியினை ஆசிரியர் உவமையாக எடுத்துக் கூறுவதால், இஃது இப்பெயர் பெற்றது.

அந்தாதித் தொடையிலமைந்த செய்யுட்களாக விளங்கும் சிறப்பையும் இச் செய்யுட்களிலே காணலாம். அந்தாதி நயம்விளங்கப் பாடும் பழைய மரபுக்கும் இது சிறந்த சான்றாகும். பொதுவாகத் தொண்டியின் எழிலும் வளமும் தலைவியின் எழிலுக்கும் சிறப்புக்கும் உவமிக்கப்படுகின்றன. இதனால், ஆசிரியரின் நாட்டுப்பற்றுப் புலனாவதுடன், தொண்டியின் சிறப்பும் விளங்கும்.

இத் தொண்டியை இந்நாளைய 'அகலப் புழை' (Alleppy) என்னும் மலைநாட்டு நகராக இருக்கலாம் என்பர். இராமநாதபுர மாவட்டத்தும் ஒரு தொண்டிப் பட்டினம் உள்ளது.

171. நெஞ்சு கொண்டோள்!

துறை : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு செல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது.

[து. வி: இயற்கைப் புணர்ச்சி பெற்றுக் களிமகிழ்வுற்ற தலைவன், அதனின் நீங்கித் தன் ஆயத்தோடு செல்லும் தலைமகளைக் காதலோடு நோக்கி, வியந்து, தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது
முழவிமிழ் இன்னிசை மறுகுதொ றிசைக்கும்
தொண்டி யன்ன பணைத்தோள்

ஓண்டொடி யரிவை என்'நெஞ்சுகொண் டோளே!

தெளிவுரை : கடலலைகள் முழங்கும் இனிதான இசையொலியோடே கலந்து, அயலதாகிய முழவுகளும் முழங்கும் இனிதான இசையும் தெருக்கள் தோறும் என்றும் ஒலித்த