பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

ஐங்குறுநூறு தெளிவுரை


எப்போதும் பெறின் அல்லது இல்லையாகிப்போகும். அதனையுணர்ந்து, நீயும் இவளுக்கு அருளினையாய் வாழ்வாயாக!

கருத்து: 'இவளை விரைவிலேயே மணந்துகொள்வதற்கு முயல்க’ என்றதாம்.

சொற்பொருள்: நளி - பெருமை; தண்மையுமாம். நல்குமதி - வரைந்து மணங்கொண்டு அருள்வாயாக. அலவன் - நண்டு. பிறழும் - துயருற்றுப் புரளும். இன்னொலி - இனிய இசையொலிகள்.

விளக்கம் : 'அலவன் தாக்கத் துறையில் இறால் புரளும் துன்பத்தை யடைதலை' திருமணத்துக்கு விரையத் தூண்டுதற்கு எடுத்துக்காட்டுகின்றாள். இறாமீனைத் தாக்கற்கு எவ்விதக் காரணமும் இல்லாதபோதும் அலவன் தாக்கிப் புரளச் செய்தலேபோல, இவளைப் பழிச்சொற்களால் துடிக்கச் செய்யும் மகளிரும் இவ்வூருட் பலராவர் என்பதாம். ஆகவே வரைதலில் விரைக என்றதாம். சிறுநுதல் - சிறுத்த நுதல்; இல்லாதாவது - ஒளிமழுங்கி மெலிந்துபோதல். இன்னொலித் தொண்டி என்றது, தொண்டிமக்கள் மகிழ்ச்சியாற் செய்யும் ஆரவாரத்தையும், இசை எழுச்சிகளையும் ஆம்.

உள்ளுறை: அலவன் தாக்கத் துறையிறாப் பிறழுவது போன்றே, உங்கள் களவுறவை யறிந்த அலவற் பெண்டிர் பழிதூற்றத் தலைவியும் அதனாற் பெரிதும் நலிவடைவாள் என்பதாம்.

குறிப்பு: அவள் அத்துயரம் தாழாதே இறத்தலும் நேரலாம் என்பவள் 'இல்லா' என்கின்றனள். இஃது தலைவன் உளத்திலே விரைய வரையும் பொறுப்புணர்வைத் தூண்டுவது உறுதி என்பதாம். 'நளிநீர்ச் சேர்ப்ப!’ என்றது, அவனும் கடல் போல் தண்ணளி உடையவன் என்றதாம்.

180. சிறுநணி வரைந்தனை கொண்மோ!

துறை: தாழ்த்து வரையக் கருதிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது.

[து. வி.: களவின்பக் களிப்பிலே திளைப்பவன், அதிலேயே சிறிது காலம் இன்புற்றுப் பின்னர் மணக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாமென நினைக்கின்றான். அவன் நினைவுப்போக்கைக் குறிப்பால் உணர்ந்த தோழி, 'விரை