பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

ஐங்குறுநூறு தெளிவுரை


கொண்மோ' என்கின்றனள். வலைவர் சிறுபொழுது ஏமாறினால், முதுகுருகு கொழுமீனைப் பற்றிக் கொண்டு போதலேபோல, நீயும் காலங்கடத்தினால் இவளை இழந்து போகவே நேரும் என்று எச்சரித்ததும் ஆம். முதுமை கண்டு இரங்கியும், வலைவர் தாமே மீனைத் தந்து விடாமைபோல, நொதுமலர் வரைவுக்கு உடன்படா வண்ணம் யாமும் அறத்தொடு நிற்பேம் என்பாள், 'முதுகுருகு இருக்கும்' என அதன் இருத்தல் மட்டுமே கூறி, அது கொண்டதென்று ஏதும் குறித்துக் கூறிற்றிலள்.

பறைதபு முதுகுருகு, பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சியை எதிர்பார்த்து இருத்தலேபோல, இவள் பெற்றோரும் இவள்மூலம் பெறும் வரைபொருள் மிகுதிக்கு எதிர்பார்த்த படியுள்ளனர் என்பதும் ஆம்.

சொல்வகையால் தொடர்ச்சிபெற்று அந்தாதித் தொடைபெறுதலோடு, கிளவி வகையாலும், சொல்லும் வகையாலும் தொடர்ச்சியுடையவை இப் பத்துச் செய்யுட்களும் என்பதும் அறிக.