பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32

ஐங்குறுநூறு தெளிவுரை


இறைச்சி : 'ஊரன் தன் மனைவாழ்க்கை பொலிக' என வேட்டேம்' என்றது, அதனைக் கைவிட்டுப் புறம்போன செயலால் அவளடைந்த துயரம் இனியேனும் நிகழாதிருப்பதாக என்று தெய்வத்தை வேண்டியதாம். தலைவனுடனிருந்து இயற்றுவதே மனைவாழ்க்கையிற் பொலிவான சிறப்புத்தருவது என்பது கருதி, அதற்கருளத் தெய்வத்தை வேண்டியதுமாம்.

4. பகைவர் புல் ஆர்க!

துறை : இதுவும் மேற்செய்யுளின் துறையே ஆகும்.

'வாழி ஆதன்; வாழி அவினி!
பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!'
என வேட்டோளே யாயே யாமே.
'பூத்த கரும்பிற். காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு

பழன மாகற்க' எனவேட் டேமே!

தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பகைவர், தம் பெருமிதமிழந்து தோற்றாராய்ச் சிறைப்பட்டுப் புல்லரிசிச் சோற்றை உண்பாராக! பார்ப்பார், தமக்கான கடமையினை மறவாதவராக, தமக்குரிய மறைகளை ஓதிக்கொண்டே இருப்பாராக' என விரும்பி வேண்டினள் தலைமகள், யாமோ, 'பூத்த கரும்புப் பயிரையும், காய்த்த நெற்பயிரையும் கொண்ட கழனிகளையுடைய ஊரனின் மார்பானது. பலருக்கும் பொதுவான பழனமாகாதிருப்பதாக" என வேண்டினேம்.

கருத்து: தலைவியோ, நாடு பகையொழிந்து வாழ்கவெனவும், மாந்தர் அவரவர் கடமைகளைத் தவறாது செய்திருக்க எனவும், பொதுநலனே என்றும் செழிக்க வேண்டினாள். யாமோ, தலைவன் புறவொழுக்கம் இல்லாதானாக, அவளுக்கே என்றும் உரிமையாளனாக, அவளுடனேயே பிரியாது இன்புற்று இருக்குமாறு அருளுதலை வேண்டினேம்.

சொற்பொருள்: புல் ஆர்க - பகைத்தெழுந்தவர் தோற்றுச் சிறைப்பட்டாராய்த் தம் பழைய செழுமையிழந்து புல்லரிசிச் சோறே உண்பவர் ஆகுக; பகையொழிக என்பதாம். பார்ப்பார் - ஓதலும் ஓதுவித்தலுமே கடனாகக் கொண்டு அறம்பேணி வருவார்; அவர், அவர்தம் கடனே தவறாது செய்வாராகுக. பழனம் - ஊர்ப் பொதுநிலம்; யாருக்கும் பயன்படுதற்கு