பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

ஐங்குறுநூறு தெளிவுரை


'எந்நில மருங்கின் பூவும் புள்ளும்' என்னும் விதியால் (தொல். பொ, 19) என்க;

விளக்கம்: 'அறம் நனிசிறக்கவே அல்லதும் கெடும்' எனினும், அதனைத் தனித்து 'அல்லது கெடுக' என்றது, தீவினை முற்றவுமே இல்லாதாதலை நினைவிற் கொண்டு கூறியதாம்.

உள்ளுறை: 'கிளைக்குருகு உளைப்பூ மருதத்து இருக்குமாறு போலத் தலைமகளும் நின் மனையாட்டியாக நின் இல்லத்தே இருந்து, தன் மனைக்கடன் ஆற்றுவாள் ஆகுக' என வேண்டினேம் என்பதாம்.

8. அரசு முறை செய்க!

துறை: இதுவும் மேற் செய்யுளின் துறையே கொண்டது.

'வாழி ஆதன் ; வாழி அவினி!
அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'
எனவேட் டோளே, யாயே; யாமே,
"அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும்
பூக்கஞல் ஊரன் சூள்,இவண்

வாய்ப்பதாக' என வேட்டேமே!

தெளிவுரை : 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! அரசு முறை செய்வதாகுக; களவு எங்கனும் இல்லாது ஒழிக' என வேண்டினள் தலைமகள். யாமோ, 'அசையும் கிளைகளோடு கூடிய மாமரத்திலே அழகான மயில் இருப்பதாகின்ற, பூக்கள் நிறைந்த ஊருக்குரிய தலைவன், முன்னாச்செய்த சூளுறவானது இப்போது மெய்யாகி விளைவதாக' என வேண்டியிருந்தோம்.

கருத்து: அவளோ, நாட்டின் பொதுநலனையே வேண்டியிருந்தாள்; யாமோ அவள் திருமணம் விரைவில் வாய்ப்பதனையே வேண்டியிருந்தோம்.

சொற்பொருள்: முறை செய்க - நீதி வழங்குக; 'ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யாவர் மாட்டும். தேர்ந்து செய் எஃதே முறை'(குறள். 541) என்பதனை நினைவிற் கொள்க. களவு - வஞ்சத்தால் பிறர் பொருளைக் கொள்ளக் கருதுதல். அலங்கு சினை - அசையும் கிளை. மா - மாமரம். சூள் - தெய்வத்தை முன்னிறுத்தி ஆணையாகக் கூறல்; 'கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி அருஞ்சூள் தருகுவன’ (அகம். 110)