பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

43


மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தடமென் தோளே!

தெளிவுரை: மனையிலே நடப்பெற்று வளர்ந்துவரும் வயலைக் கொடியானது,கொடிவீசிப் படர்ந்து சென்று, புறத்தே யுள்ள வேழத்தினைச் சுற்றிப் படர்கின்ற துறை பொருந்திய ஊருக்குரியவன் தலைவன். அவன் செய்த கொடுமையானது அயலாருக்கும் புலனாகி அலராவதற்கு நாணினமாய், 'அவன் எமக்கு நல்லன்' என்றே யாம் வாயாற் கூறுவோம். அப்படிக் கூறினாலும், எம் பெரிய மென்தோள்கள், தம் மெலிவாலே, 'அவன் நல்லன் அல்லன்' என்னும் உண்மையைப் பிறரும் நன்றாக அறியுமாறு புலப்படுத்தி விடுமே!

கருத்து : யான், அவன் எனக்குச் செய்துவரும் கொடுமையை மறைப்பினும், என் தோள்கள் தம் மெலிவாலே பிறர் அறியுமாறும், பழித்துப் பேசுமாறும் காட்டிவிடும் என்பதாம். ஆகவே, என் துயர் அடக்க அடங்கும் அளவின தன்று என்பதாம்.

சொற்பொருள் : வயலை - வசலைக் கீரை: பசலைக் கீரை எனவும் கூறுவர்; இது கொடி வகை; 'இல்லெழு வயலை' (நற் 179) என்பதும் காண்க. கொடுமை - பரத்தைமை நச்சிச்செனற ஒழுக்கத்தால், தன்னைப் பிரிவுத் துயருட்படுத்தி நலியுமாறு செய்திட்ட கொடிய செயல். கேழ் - பொருந்திய; கெழு என்பது உகரம் கெட்டும், எரேம் நீண்டும் கேழ்' ஆயிற்று (தொல் குற்றிய லுகரம் 76 உரை).

விளக்கம் : தலைவனின் பரத்தைமை நாடலாகிய போற்றாப் புறவொழுக்கம், மனத்துயரையும உடல் நலிவையும் தலைவியிடத்தே மிகுவித்தல் உண்மையேனும், அதனைப் பிறர் அறியப்புலப்படுத்தாதே மறைத்து ஒழுகுவதே அவள் கற்பற் நிலைக்குரிய தகுதியாகும் என, அவள் அடக்க முயல்கின்றாள். ஆயின, அவளைக் காண்பார், தாமே அவள் நலிவறிந்து உண்மையினைக் கண்டுணர அவள் தோள்கள் மெலிவுகாட்டும் எனபதாம். 'சுற்றும்' - தான் படர்தற்கான கொழுகொம்பாகக் கொண்டு சுற்றிப் படரும். தன்னையும் தன்தோளையும் வேறுபடுத்து உரைக்கும் பேச்சுநயமும் காண்க.