பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

55


தெளிவுரை : எக்கரிடத்தேயுள்ள மாமரத்திலே புதிதாகப் பூத்துள்ள பெரிய அரும்புகள். தலைவரைப் புணர்ந்தோரின் மெய்யிடத்தே நின்றும் எழுகின்ற மணம் கமழ்கின்றதான குளிர்ச்சியான பொழிலினிடத்தே. வேழத்தின் வெள்ளிய பூவாகிய வெண்மையான உளைபோன்ற மலரானது எழுந்து, அம் மணத்தைத் தோன்றாவாறு துடைக்கும் ஊரன். தலைவன். ஆதலினாலே, கலக்கமுற்று, மாரிக்காலத்தே மழையிற்பட்ட மலரிலிருந்து துளிகள் வீழ்தல்போலக் கண்களினின்றும் கண்ணீர்த்துளிகள் விழுவேமாயினேம் யாம்.

கருத்து: அவன்பால் நம்பிக்கை இழந்தேம் என்பதாம்.

சொற்பொருள் : எக்கர் - இடுமணலால் அமைந்த மணல் மேடு; நெய்தற்கண் கடலலைகளாலும், மருதத்தின்கண் ஆற்று வெள்ளத்தாலும் இத்தகைய மணல்மேடுகள் அமையும்; புதுப்பூம் பெருஞ்சினை - புதிதாகப் பூத்துள்ள பெரிய பூவரும்பு கள்: புதுப்பூக்கள் உடைய பெரியகிளையும் ஆம். புணர்ந்தோர் - கூடிக் கலந்தோர். வெள்ளுளை - வெள்ளிய உளைபோல்வதான வேழப்பூ. சிக்கும் - கெடுக்கும்; போக்கும்.மாரிமலர் - மாரியிற் பட்ட மலரின்றும் உதிரும் நீரைக் குறித்துக் கூறியது.

விளக்கம்: கலந்தோர் மேனியிலேயிருந்து எழுகின்ற கலவியால் தோன்றிய புதுமணத்திற்கு மாவரும்பின் நறுமணத்தைப் பொருத்தமாக உவமித்தனர். வண்டினமும் இதன்பால் மயங்கிவந்து மொய்க்கும் என்பதனை, "பொறிகிளர் ஆகம் புல்லத், தோள் சேர்பு, அறுகாற் பறவை அளவில் மொய்த்தலின் கண்கோளாக நோக்கிப், 'பண்டும் இனையையோ?' என வினவினள் யாயே" என வரும் நற்றிணையாலும் அறியலாம் (நற். 55). கண்பனி உகும் - கண்துளி சிதறும்.

உள்ளுறை : மாம்பூவின் நறுமணத்தைத் தன் தீமணத்தால் வேழவெண்பூ ஒழித்தலேபோல, தலைவன் என்னோடு இல்லறமாற்றி இன்புறுத்திய தண்ணளியைப் பரத்தையர் தமது அன்பற்ற பொய்ம் முயக்கத்தாலே ஒழித்தனர் என்பதாம்.

மாம்பூ, புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண்பொழிலின் இனிமையினை. வேழ வெண்பூ தோவிறிக் கெடுத்தாற்போல, எம் இல்லறத்தின் இனியவாழ்வினைத் தலைவனின் புறவொழுக்கம் சிதைத்தது என்பதும் ஆம்.