பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

61


தெளிவுரை: முள்ளிச் செடியின் வேர்ப்பக்கத்துள்ளதான அளையிடத்தேயுள்ள அலவனை ஆட்டி அலைத்து விலையாடியும், பூக்களைப் பறித்தும், எய்திய புனலானது அழகுடன் விளங்கும் ஊருக்கு உரியவனாகியவன் தலைவன். அவன் நாம் தெளியத் தகுவன செய்து முன்னர் நம்மைக் கூடினான். இப்போது, நம்மைத் தாக்கி வருத்தும் அணங்கினைப்போல வருத்திக் காட்டுவதுதான் எதனாலோ?

கருத்து: 'அவன் நடத்தையிலே மாற்றம் புலப்படுவது, அவன் மேற்கொண்டு ஒழுகுகின்ற ஒழுக்கத் தவறினாலே தான்.'

சொற்பொருள் : களவன் ஆட்டு - அலவனாட்டு. பூக்குற்று - பூப்பறித்து. இவை மகளிர் விளையாட்டுகள். 'நம்' - தனித்தன்மைப் பன்மை. தாக்கணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்; நம்மை உறவோடு கூடிக் கலந்தவன், இப்போது வெறுத்து வருத்தும் கொடுமையாளன் ஆயினனே என்பதாம்.

விளக்கம் : அலவனாட்டலும் பூப்பறித்தலும் இளமகளிரின் நீர் விளையாட்டுக்கள்: 'அலவனாட்டுவோள்' என்று பிறரும் கூறுவர் (நற். 363). 'சுனைப் பூக்குற்று' என்பதும் நற்றிணை (நற். 173).

உள்ளுறை: 'மகளிர் அலவனை அலைத்துப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்' என்றது. தலைவன் தன் மனைவியைத் துன்புறுத்திப் பரத்தையர் உறவிலே திளைத்து இன்பங் காண்பவன்' என்று குறிப்பினாற் சொன்னதாம்.

'அலவனாட்டியும் பூப்பறித்தும் இளமகளிர் விளையாட் டயர்ந்த நீர் அழகு செய்யும் ஊரன்' எனவே, அந்நீர்தான் தெளிவிழந்ததாய்க் கலங்கித் தோன்றுமாறு போல, எம் இல்லறமும், அவன் எம்மைப் பிரிவினாலே நோயுறச் செய்து வருத்தியும் பரத்தையரோடு இன்புற்றுப் பழி விளைத்தும் வரும் கொடுமையால். அமைதியும், பெருமையும் தெளிவுமிழந்து கலங்கலுறுவதாயிற்று என்பதுமாம்.

24. நலங்கொண்டு துறப்பது ஏன்?

துறை: பரத்தையருள்ளும் ஒருத்தியைவிட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்பத்,தலைமகட்குச் சொல்லியது.