பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

63


கும் நண்டையும்; தான் பெற்ற பிள்ளையையே கொன்று தின்னும் கொடிய முதலையையும் உடையது. ஆகவே, அவ்வூரனான அவனிடத்தே அன்பும் பாசமும் நிரம்பியிருக்குமென எதிர்பார்த்தது நம் மடமையேயன்றி அவன் தவறன்று என்கிறாள் தோழி. 'மகிழ்நன், பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கி, அவர் நலம்கொண்டு, துறப்பது எவன்கொல்?' என, அவன் பிறர்மாட்டுச் செய்துவரும் கொடிய செயல்களையும் அவன் இயல்பாகவே இணைத்துக் கூறலும் பொருந்தும்.

உள்ளுறை: தாய் சாவப் பிறக்கும் களவனையும், தன் பிள்ளை தின்னும் முதலையையும் உடைய கொடுமையான ஊரினனாதலால், அவன் விரும்பிய மகளிரை முயங்குதலும், நலன் உண்ணலும், பின் அன்பற்றுத் துறத்தலும் அவனுக்கும் உரிய அருளற்ற கொடுந்தன்மையேயாம் என்று கூறுவதாகக் கொள்க.

மேற்கோள்: 'தலைமகன் கொடுமை கூறினமையின் உள்ளுறை யுவமம் துனியுறு கிளவியாயிற்று. தவழ்பவற்றின் இளமைக்குப் 'பிள்ளை' என்னும் பெயர் உரியது என்பார் பேராசிரியர் (தொல், உவம. 28, மரபு. 5) தோழி. காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்துமாற்றால் உள்ளுறை உவமம் கூறியது என்றும் அவர் கூறுவர் (தொல், உவம. 31, பேர்).

25. இழை நெகிழ் செல்லல் !

துறை: மேற்பாட்டின் துறையே.

புயல் புறந்தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்
கழனியூரன் மார்பு பலர்க்கு

இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!

தெளிவுரை : "அன்னாய்! புயலானது புறத்தேயாகத் தூக்கித் தள்ளிவிட்ட, முற்றாத இளம்பிஞ்சுக் காய்களையுடைய வயலையின் சிவந்த கொடியினைக், களவன் புகுந்து அறுத்துப் போடும் கழனியைக் கொண்ட ஊருக்கு உரியவன் தலைவன். அவன் மார்பானது, நின் ஒருத்திக்கே அல்லாமல், மகளிர் பலருக்கும் இழைநெகிழச் செய்யும் துன்பத்தைத் தருவதாகும்."