பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: நின்னையன்றியும், அவனாலே துயரினைக் கண்டவர், மகளிர் பலராவர்!

சொற்பொருள்: புறந்தந்த - பந்தரினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளிய, புனிற்றுவளர் பைங்காய் - இளம்பிஞ்சாக இருக்கும் பசுங்காய்.செங்கொடி - சிவந்த கொடி. பசலையுள் ஒருவகை இது. செல்லல் - துயரம். இழை - அணிகலன்கள்; வளையும் தொடியும் போல்வன. புயல் - புயற்காற்று; அயல எனவும் பாடம்.

விளக்கம்: புயலிலே தன் பற்றுக்கோட்டினை விட்டுத் தரையிலே இழுத்தெறியப்பட்ட இளம் பிஞ்சுகளைக் கொண்ட வயலைக்கொடியினை, தானும் அருளின்றி அறுத்துக் களிக்கும் களவன்போலவே, தன்மேற் காதலால் தம் தாயரின் தடையை யும் மீறிவந்து கூடிய மகளிருக்கு ஊறுவிளைத்து, அவர் எவ்வகைப் பற்றுக்கோடும் இல்லாதவராகத் துடிப்பக் கண்டு களிக்கும் கொடிய மனத்தினன் ஊரன் என்பதாம். 'வயலைச் செங்கொடி' என்றது, அதன் மென்மைமிகுதியை உணர்த்தற்கு. ஈன்றணிமை கொண்ட மகளிரும் பசலைக் கொடி போல மென்மையுடையார் என்பதுபற்றி அவரையும் பசலையுடம் புடையார் என்பதும் நினைக்க.

உள்ளுறை: 'வயலையின் பசுங்காய் சிதைய, புயலாலே வீழ்த்தப்பெற்ற அதன் கொடியை, அலவன் தானும் அறுத்துக் களித்தாற் போன்று, மகப்பெற்று வாலாமை கழியாதே மனையிடத்திருக்கும் நம் நலத்தினைச் சிதைத்து, நம் புதல்வனுக்கும் கேடிழைக்கின்றான் நம் தலைவன்' என்பதாம்.


களவன் வயலைச் செங்கொடியை அறுத்தலால், விளைந்து முற்றிப் பயன்தர வேண்டிய, காய் பல காய்க்கும் செடி வாடி அழிந்தாற் போல, தலைவன் ஒருத்தியோடு ஒன்றி வாழ்தலான பண்பினை அறுத்துப் பரத்தமை பேணலால், அப்பெண்டிர் பலருக்கும் துயரம் செய்வான் ஆயினன் என்பதும், அம் மயக்கால் புதலவனைக் காத்துப் பேணும் பொறுப்பையும் மறந்தனன் என்பதும் ஆம்.

26. இன்னன் ஆவது எவன்கொல்?

துறை: தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிறகு அவன் பொருந்தா நின்றான்' என்றவழி, 'அவன்பாடு அஃதில்லை' என்பதுபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.