பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

81


அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
ஒண்தொடி முன்கை யாம்அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறை கொண்டனன்' என்ப.
கெண்டை பாய்தர அவிழ்ந்த

வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.

தெளிவுரை : 'தோழி, வாழ்வாயாக! கெண்டை மீன் பாய்தலினாலே கட்டவிழ்ந்து மலர்ந்த, வண்டு விரும்பும் ஆம்பல் பூக்களையுடைய நாட்டினன் தலைவன். அவன், ஒள்ளிய தொடியணிந்த முன்கையினையுடைய யாம் அழும்படியாக, எம்மைப் பிரிந்து சென்று, தன் பெண்டாகிய மனையாளின் வீட்டிலேயே, அவளைப் பிரியாதேயே தங்கி இன்புற்றிருக்கின்றனன் என்பார்களே! அதுதான் என்னையோ!*

கருத்து: அவர் அவ்வாறு சொல்வது நடவாது; அவன் என்பால் மீண்டும் விரைவில் வருவான் என்பதாம்.

சொற்பொருள்: பெண்டிர் - மனைவியைக் குறித்தது; இற்பெண்டிர் என்பது வழக்கு. இறைகொள்ளல் - நிலையாகத் தங்கியிருத்தல். பாய்தர - பாய.

விளக்கம்: 'உலகியல்பற்றி' என்றது, தேவவழிபாடு, சமுதாய விழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை. இவற்றுள், தலைவன் கலவாதவழி ஊரும் உறவும் பழிக்கும் ஆதலின், அவன் தன் மனைவியோடு தன் வீட்டில் சென்று தங்கியிருப்பானாயினன் என்பதாம். இது இன்றைக்கும் சமுதாயத்தில் நிகழ்ந்துவரும் ஒரு மரபாகவே இருப்பதைக் காணலாம். அவ்வாறு தன்வீடு சென்றவன், தன் மனைவியின் பெருமையையும், தன் சிறுமையையும், அவளின்றித் தன் குடிப்பெருமை சிறவாமையையும் நினைந்தானாகி, அங்கேயே தங்கி, அவளைத் தெளிவித்து இன்புற்றிருந்தனன் என்பதும் பொருந்தும்.

உள்ளுறை : கெண்டை பாய்வதற்கு ஆம்பல் மலரினும், அதுதான் வண்டினைப் பிணைத்து நிற்பதேயன்றிக் கெண்டையை அல்லவாதல் போல், உலகியல்பற்றி அவன் தன் மனை சென்றானாயினும், அவன் அன்பு எம்மிடத்தேயே என்றும் மாறாதபடி நிலவுவதாகும் என்பதாம்.

ஐங்.-6