பக்கம்:ஐந்திணை வளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஐந்திணை வளம் வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்றுண்டோ அறிவின்கண் நின்ற மடம்! 'அறிவின்கண் நின்ற மடம்' என ஒன்றில்லை.அதனால், நீயும்மடமைகொள்ளாது,நின் அறிவின் விளக்கத்தோடுநடந்து கொள்க’ என்கின்றாள் தோழி. அறிவினனாகிய அவனும் பொருளினை அறிகின்றான். நாமும் சொல்லாட்சியின் செறிவிலே திளைக்கின்றோம். வெறி--மணம், கறி--மிளகு, மடம்-அறியாமை. 9. தெளித்த தெளிவு மற்றொரு நாள், தலைவியும் தோழியுமாக வந்து தலைவனைச் சந்திப்பதற்கெனக் குறிப்பிட்டசோலையிடத்தே அவனது வரவினுக்காகக் காத்திருக்கின்றனர். அதுபோது, தலைவன் வந்து வேலிமறைவில் நிற்பதனை அறிந்த தோழி, அவனுக்கு மணவினைமேற் கருத்துச் செல்லுதலை விரைவுபடுத்த நினைத்தவளாகத் தலைவியிடம் அவனைப் பழித்துப் பேசுகின்றாள். 'தோழி இந்த மலைநாடனோடு நீ ஒழுகிவருகின்ற ஒழுக்கத்தை நினைத்தால் எனக்குப் பெரிதும் கவலையாக இருக்கின்றது. அவன் சொல்லைக் காப்பாற்றும் தூயவனாகவோ, துணிவுடையவனாகவோ எனக்குத் தோன்றவில்லை. இந்த உறவினால் நமக்கு இனித்துன்பமே வரப்போகின்றதுபோலும். என் உள்ளம் அதனை நினைத்து நடுங்குகின்றது என்கின்றாள். தன் காதலனை ஐயுற்று உரைக்கும் தோழியின் சொற்களைக் கேட்டதும், தலைவி, தான் அவன்பாற் கொண்டுள்ள அசையாத காதலுறுதியினை எடுத்துக் கூறி, அவன் உறவை வெறுத்து உரையாதிருக்கவேண்டுகின்றாள். 'தோழி' 'ஊர் மன்றத்தே பொருந்தியுள்ள கற்களிலே, கருங் கண்களையுடைய முசுக்குரங்குகள் குதித்தாடும் மலைகளைச் சூழவுடைய நாட்டினன் நம் தலைவன். 'அவன், முதல்நாட்கூட்டத்திலே நான் அஞ்சினேனாக, எனக்குத் தெளிவதற்கு உரியவான பல உறுதி மொழிகளையும் உரைத்தனன். என்னைத் தெளிவித்துக்கூடுதலையும் செய்தனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/34&oldid=761834" இலிருந்து மீள்விக்கப்பட்டது