பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

வடமொழியில் “மாதா” ஆயிற்று. ஆங்கிலத்திலும் “மதர்” ஆயிற்று. மனிதன் தமிழ்ச்சொற்களைச் சிதைத்துக் கூறினாலும், ஆடு, மாடுகள் சிறிதும் சிதைக்காமல் நல்ல தமிழை அப்படியே வைத்து, “அம்மா” என்றே அழைத்து வருகின்றன. இச்சொல்லைக் கேட்ட தாய் மனம் இளகி எதையும் தந்துவிடுகிறாள். என்னே தாயின் உள்ளக் கனிவு!

பல ஊர்களில் பல கழகங்கள் நிறுவப் பெற்றிருக்கும். அவைகள் அனைத்தும் கிளைக் கழகங்கள் என்றே பெயர் பெறும். ஆனால், அவைகளைத் தன்னுள் அடக்கி, தாங்கி உயர்ந்து நிற்கும் கழகமோ, “தாய்க் கழகம்” என்ற பெயரைப் பெறும். இப்பெயரும் தாயின் பெருமையை நமக்கு நன்கு அறிவிக்கின்றது.

இதுகாறும் கூறியவைகளைக்கொண்டு, தாயும் ஒரு செல்வம் என்பதும், அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது என்பதும் ஒருவாறு விளங்கியிருக்கலாம்.

தம்பி! உனக்குத் தாய் உண்டா? இருந்தால் விடாதே! உன் தாய் உயிரோடு இன்றிருந்தால், நீ ஒரு சிறந்த செல்வத்தை பெற்றிருக்கிறாய் என்று கருது. இன்றோ, நாளையோ, இன்னும் சில ஆண்டுகளிலோ, அச்செல்வம் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். பிறகு அச்செல்வத்தைத் திரும்பத் தேட உன்னால் முடியுமா? என்று நினைத்தப் பார். அதனை இப்போதே நன்குபயன் படுத்திக்கொள் வாயாரப் போற்றி, கையார அள்ளிக் கொடு! மனத்தை மகிழச் செய்! வயிற்றைக் குளிரச் செய்!

வாழுங்காலத்தில் வயிறு எரியச் செய்து மாண்ட பிறகு மனம் புழுங்கி அழும் மக்களும் உண்டு. அவர்களைக் கண்டால், அவர்களுக்காக இரங்கு! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சையெடுக்க கும்பகோணத்தில் கோதானம் கொடுக்கும் பிள்ளைகளும் உண்டு. அவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்கு; தாயின் வயிற்றைப் பற்றி எரியச் செய்யாதே! அவ்வயிற்றைப் பசிக்கவும் விடாதே! ஏனெனில், நீ இருந்த இடம் அது அல்லவா? ஆகவே,தாயைப் போற்று! அது உனது கடமை !