பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24

மனைவியை விசாரித்தார். ‘பொம்மைக்காரி சொல்வது பொய்’ என்று அவரிடமும் சொல்லிவிட்டாள். ‘எது எப்படியானாலும் காசைக் கொடுத்துவிடு, போகட்டும்’ என்றார். அதற்கு அவள், காசைக் கொடுத்தால் பொய் வெளிப்பட்டுவிடுமே எனப் பயந்து மறுத்துவிட்டாள். பொம்மைக்காரியும் போகவில்லை. செல்லத்தின் தந்தை, அவளை விரட்டினார். “திருட்டுப் பெண்டாட்டியை மிரட்ட முடியவில்லை. என்னை மிரட்டவருகிறீரே!” என்றாள். பொம்மைக்காரியை அடித்துவிட்டார். அவ்வளவுதான், தெருவில் நடந்த இரைச்சல் ஊரில் பரவத் தொடங்கிவிட்டது. இறுதியில் போலீசார் தலையிட்டனர். செல்லத்தின் தந்தை இதற்காகத் தண்டனையும் பெற்றார்.

கண் : பாட்டி! இதையா நீங்கள் பொய் என்று கூறினிர்கள்? பொய், திருட்டு, வஞ்சகம், சூது, ஏமாற்றம், ஆத்திரம், அடிதடி, அவமானம் அத்தனையுமல்லவா இதில் கலந்திருக்கிறது?

பாட்டி : ஆம் கண்ணே! பொய் உள்ளத்தே புற்று வைக்கும். கரையான் காட்டிலே புற்று வைக்கும். கறையான் புற்றில் நுழைந்தபின் எலி, பாம்பு முதலியவைகள் நுழைவதுபோல, பொய் உள்ளத்தில் புகுந்தபின் அப்புற்றில் திருட்டு, வஞ்சகம், சூது, நெறிதவறல் அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்துவிடும்.

கண் : பாட்டி! இதனால் பெருங்கேடு விளையுமே!

பாட்டி : ஆம் கண்ணே! புற்றில் எலியும், பாம்பும் நுழைவதைக் கண்டுவிட்டால், கண்டவர்கள் சும்மா விடுவார்களா? அப்புறம் கடப்பாறை, மண்வெட்டிகளெல்லாம் நுழைந்து, புற்றையே நாசமாக்கிவிடும்.

கண் : பொய்யை உள்ளத்தில் நுழையவிட்டவர்கள் கதியும் அதே நிலைதான் போலும்!

பாட்டி : ஆம் கண்ணு! அதனால்தான் செல்லத்துடன் சேராதே என்றேன்.