பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25


கண் : பாவம்! செல்லம் இதை ஒன்றும் அறியாள் பாட்டி!

பாட்டி : ஆம். அவள் அறியாமல்தான் செய்தாள். அவள் தாய் அப்போதே அவளைக் கண்டித்துத் திருத்தியிருக்க வேண்டும். அவள் செய்யவில்லை. அதற்கு மாறாக அவள் திருட்டை ஆதரித்து, அதை மறைத்துப் பொய்யையும் கூறியிருக்கிறாள். அதனால், செல்லத்திற்குத் தான் செய்தது சரி என்றுதானே படும்? அதையே அவள் மேலும் தொடர்ந்து செய்து கெடுவாள். பல குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே பெரிய பகைவர்களாக இருந்து வருகிறார்கள். பிறகு, குழந்தைகளை யார் எப்படித் திருத்தமுடியும்?

கண் : அப்படியானால், பாட்டி! பிள்ளைகள் இளமையிலேயே கெட்டுவிடுகிறார்களா?

பாட்டி : ஆம் கண்ணு! குழந்தைகளுக்கு மூன்றாவது வயது நிறையும்போதே அறிவு வளரத் தொடங்கி விடுகிறது. அப்பொழுதிருந்தே அது உலகத்தை ஆராயவும் தொடங்குகிறது. அதன் உள்ளம் மாசு மறுவற்றது. அது படம் எடுக்கப் பயன்படுகிற (Plate of photo) உருவப் பதிவுக் கண்ணாடியைப் போன்றிருக்கும். எது தன்னெதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னில் பதிப்பித்துக்கொள்ளும்.

மோர் விற்பதைக் கண்டால், ஒரு கொட்டாங்கச்சியைத் தலையில் வைத்துக்கொண்டு, ‘மோரோ மோர்!’ என்று கூவும். வீடு கட்டுவதைக் கண்டால் மணலைக் குவித்து வீடுகட்டத் தொடங்கும். குதிரை ஏறுவதைக் கண்டுவிட்டால், குட்டிச்சுவரில் ஏறியாவது குதிரை ஒட்டி ஆடும். திட்டுவதைக் கண்டால் திட்டும். மரியாதையாகப் பேசுவதைக் கண்டால் மரியாதையாகப் பேசும். தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகும். குழந்தைகளின் பேச்சிலிருந்தும், செயலிலிருந்தும் அவ்வீட்டாரின் குணம், நடத்தை முதலியவைகளை எளிதாக அறிந்து