பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பாண்டியனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை அக்கிரமித்துப் பிடித்துக் கொண்டதற்காக, கேரள மன்னனைத் தாமிரவருணிக் கரையில் எதிர்த்து வெற்றி கொண்டு தாமிரவருணிக் கரையில் வெற்றித் தூண் நாட்டியதாக அச்சுதராயனுடைய சாசனமொன்று கூறுகிறது. இவ் வெற்றிக்குப் பின்னர் பாண்டியன் மகளை அவன் மணந்து கொண்டு இரு மன்னர் குலத்திற்கிடையே உறவு ஏற்படுத்திக் கொண்டான் என்றும் விஜய நகர சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்பகுதிகளில் கன்னடியர், கேரள அரசர்களோடும் அவர்கலோடுநேசம் கொண்டிருந்த வேறு சிற்றரசர்களோடும் போராடியிருக்க வேண்டும்.

இவ்வாறு பல போர்கள் கன்னடியருக்கும் பாண்டிய குலத்தினருக்கு மிடையே நடை பெற்றிருக்கின்றன என்பது பல ஆதாரங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது. இப்போர்கள் எப்பொழுது தொடங்கின? இப்போர்களில் பங்கு கொண்டவர்கள் யார் யார் என்ற வினாக்களுக்கு நமக்கு கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து ஓரளவு தெளிவான விடை கூற முடிகிறது.


சாசனச் சான்றுகள்

பாண்டியர்கள் மதுரையையும் கொற்கையையும் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தார்கள் என்பதைச் சங்க நூல்களும் பிற்காலக் கல்வெட்டுகளும் நமக்குத் தெளிவாக்குகின்றன. சோழர்களின் ஆதிக்க காலத்தில் பாண்டியர்கள் பெருமை குன்றித் தங்கள் தலைநகரைக் கைவிட்டு தெற்கே குடிபெயர்ந்து தென்காசி, கரிவலம் வந்த நல்லூர் முதலிய ஊர்களில் தங்கி ஆட்சியை நிறுவிக் கொண்டனர் என்று கருதச் சான்றுகள் உள்ளன. ஆயினும் அவர்கள் மதுரையைக் கைவிட்டு விடாமல் பல சோழ மன்னர்கள் காலங்களில் மதுரையைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர் என்பது, சோழ மன்னர்கள் பல முறை மதுரைமீது படையெடுத்துச் சென்று மதுரையிலிருந்து பாண்டியர்களை விரட்டி விட்டதாக தங்கள் மெய்க் கீர்த்திகளில் கூறிக்கொள்ளுவதிலிருந்து விளங்குகிறது. முதலாம் ராஜேந்திரன் தனது இரண்டாவது மகனை சுந்தரச் சோழ பாண்டியன் என்ற பட்டப்பெயரோடு மதுரையை ஆள நியமித்தான் என்பது அவனது சாசனங்களால் விளங்கும். ஆனால் அவனுடைய காலத்திற்குப் பிறகு பல சோழ மன்னர்கள் மதுரையைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கியதாக தமது கல்வெட்டுக்களில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். எனவே வலிமை குன்றிய போது மதுரையை விட்டு வெளியேறிய பாண்டியர்கள், தெற்கே சென்று