பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


வதையும் வென்றடிப் படுத்தினான். ஹாய்சாலர்களை கண்ணனூர் கொப்பத்திலிருந்து விரட்டினான். மூன்றும் குலோத்துங்கன் வீழ்ச்சிக்குக் காரணமாகி, அவனது ராஜ்யத்தின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட காடவர் குலாதிபதி கோப்பெருஞ்சிங்கனை வென்று கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றினான். தமிழ் நாடு முழுவதும் அவன் ஆளுகைக்குட்பட்டது. காஞ்சியில் ஆண்டு வந்த கண்ட கோபாலனைக் கொன்று காஞ்சியை கைப்பற்றினன் வடக்கே படை நடத்திச் சென்று நெல்லூரைக் கைப்பற்றினான். அவன் இறக்கும் போது அவனுடைய ஆட்சி "கொல்லத்திவிருந்து நெல்லூர் வரை பரவியிருந்தது” என்று மார்க்கோபோலோ கூறுகிறார்.

அவன் காலத்திலேயே வடக்குப் பகுதியில் நெல்லூரில் தெலுங்குச் சோழர்களும், கொங்கு நாட்டில் கோப்பெருஞ் சிங்கனும் தலைதுாக்கி தங்கள் தலைநகரங்களை மீண்டும் கைப்பற்றிக் கொண்டனர்.

சுந்தர பாண்டியனோடேயே கூட்டாக ஆண்டுவந்த குலசேகர பாண்டியன் மறுபடியும் வடக்கே சென்று இழந்துவிட்ட நாடுகளை மீண்டும் வென்று பாண்டியர் ஆளுகைக்குக் கீழ் கொணர்ந்தான். 50 ஆண்டுகளுக்கு மேலாகவே அவன் ஆட்சி பீடத்தில் வீற்றிருந்தான். சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் காலத்தில் பல ஊர்களும், கோயில்களும் நிர்மாணிக்கப்பட்டன. வலிமை மிக்க இவ்வரசர்கள் காலத்தில், பாண்டியர் கிளைக்குலங்களைச் சேர்ந்த சிற்றரசர்கள் அடங்கிப் பணி கேட்டு நடந்தனர்.

பாண்டியர் தாழ்வு

குலசேகரன் இறந்ததும் அரச பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. அவனது ஆசைநாயகி மகனான வீர பாண்டியனுக்கும், பட்டத்து அரசியின் மகனான சுந்தரபாண்டியனுக்கும் பதவிப் போட்டி காரணமாக போர் தொடங்கியது. இப்போரைப் பயன்படுத்திக் கொண்டு கேரள ரவிவர்மன் குலசேகரன், படை கொண்டு காஞ்சி புரம்வரை வந்தான். வீரபாண்டியன் அவனோடு சேர்ந்து கொண்டான். சுந்தரபாண்டியன், காகதீய மன்னன் பிரதாபருத்திரகனைத் துணைப்படை கொண்டுவர அழைத்தான். முப்பிடி நாயக்கன் என்ற நெல்லூர்த் தளபதியை, பிரதாபருத்திரன் பெரும்படை